காஷ்மீர்.. தனி நாடா..? 7ம் வகுப்பு வினாத்தாளில் சர்ச்சை – பீகார் அரசு சொல்வதென்ன?

பீகார் மாநிலத்தில், ஏழாம் வகுப்பு வினாத்தாளில், காஷ்மீர் தனி நாடு என கேட்கப்பட்ட கேள்வி தொடர்பான விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அம்மாநில அரசு உறுதிப்பட தெரிவித்து உள்ளது.

பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் அண்மையில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பருவ தேர்வுகளை மாநில கல்வி வாரியம் நடத்தியது.

அதில் 7 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில், கீழ்க்கண்ட நாடுகளின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. உதாரணமாக, சீனாவில் வசிப்பவர்கள் சீனர்கள் என்றால், நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர் மற்றும் இந்தியாவில் வசிக்கும் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள் என கேட்கப்பட்டு இருந்தது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பள்ளியின் ஒன்றின் தலைமை ஆசிரியர் கூறுகையில், “இந்த கேள்வித்தாள் பீகார் கல்வி வாரியத்தின் மூலமாக பெறப்பட்டது. காஷ்மீர் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்று கேட்கப்பட்டிருக்க வேண்டும். தவறுதலாக காஷ்மீர் நாட்டு மக்கள் என்று கேட்கப்பட்டு உள்ளது. இது முழுக்க முழுக்க மனித தவறு” என தெரிவித்தார்.

இந்த விவகாரத்திற்கு பாஜக தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெயிஸ்வால் கூறுகையில், “இந்த விவகாரத்தில் பீகார் அரசு மவுனமாக உள்ளது. அவர்கள் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்தபகுதி அல்ல என நினைக்கிறார்கள்” என கூறினார்.

இதற்கிடையே, “வினாத்தாள் விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என, பீகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் உறுதி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.