குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறது. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்பும்.க்ஷ ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன், கேரை, சுறா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். தற்போது குளச்சல் கடல் பகுதியில் கணவாய், கிளி மீன்கள், நாக்கம் மீன்கள் கிடைத்து வருகின்றன. குளச்சல் பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது.
இன்று மழை சற்று ஓய்ந்து காணப்படுகிறது. இருப்பினும் வானம் மேக மூட்டமாக உள்ளது. ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 42 படகுகள் இன்று கரை திரும்பின. இவற்றுள் நாள் ஒன்றுக்கு 20 டோக்கன்கள் முறையில் விசைப்படகுகளில் இருந்த மீன்கள் இறக்கப்பட்டன. அவற்றுள் கிளி மீன்கள், நாக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் அவற்றை மீன் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். ஒரு 50 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் ரூ.2000 விலை போனது.
நாக்கண்டம் ஒரு பெட்டி ரூ. 3000 க்கு விலை போனது. தோட்டு கணவாய் தலா கிலோ ஒன்றுக்கு ரூ.380 விலையும், ஓலக்கணவாய் ரூ.240 க்கும்,ஸ்குட் கணவாய் ரூ.420 க்கும், நிப்புள் கணவாய் ரூ.180 க்கும் விலை போனது. கிளி மீன்கள் பற்பசை தயாரிப்பதற்கும், நாக்கண்டம் மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனம் தயாரிப்பதற்கும் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். இது சராசரி விலை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.