தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையை இழுத்து மூடக் கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் 100வது நாளை எட்டிய போது, அதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி, போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பொது மக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த அப்போதைய முதலமைச்சர்
, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தொலைக்காட்சிகளில் பார்த்து தெரிந்து கொண்டதாக பேட்டி அளித்தார். இதை அடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு இந்த ஆணையம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை, தமிழக சட்டப்பேரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில், துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நொடிக்கு நொடி தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்டதாக மாற்றி பேசி உள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட திமுக உள்ளிட்ட கட்சிகள், எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கருத்து தெரிவித்து வருகின்றன. இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் இந்த கோரிக்கையை ஜவாஹிருல்லா உள்ளிட்ட எம்எல்ஏக்கள் எழுப்பினர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர்
பேசுகையில், “கடப்பாரையை முழுங்கிட்டு கசாயம் குடிச்சிடுவான் எனும் அளவிற்கு பெரிய பொய்யை பழனிசாமி அன்றைய தினம் சொன்னார்; அவர் சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே சொல்லி விட்டது. இந்த சம்பவத்தில் யார் யார் குற்றவாளிகளோ, அவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்” என தெரிவித்து உள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மீதும் எந்நேரத்திலும் நடவடிக்கை பாய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.