இங்கிலாந்தின் பிரதமராகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பதவிவகித்த போரிஸ் ஜான்சன் தன்னுடைய பொறுப்புகளிலிருந்து விலகியதையடுத்து, ரிஷி சுனக், லிஸ் ட்ரஸ் (Liz Truss) ஆகியோர் இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கை தோற்கடித்து லிஸ் ட்ரஸ் பிரதமராகப் பதவியேற்றார். அதையடுத்து பிரதமராக லிஸ் ட்ரஸ் எடுத்த சில முடிவுகளால், இங்கிலாந்தின் பொருளாதாரம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் விமர்சனத்துக்குளாக, இங்கிலாந்து அமைச்சரவையில் அங்கம் வகித்த நிதியமைச்சர் குவாசி குவார்டெங்(Kwasi Kwarteng)-ஐ, லிஸ் ட்ரஸ் நீக்கினார். அதைத் தொடர்ந்து பொருளாதார சிக்கல் தொடர்பாக மன்னிப்பு தெரிவித்த லிஸ் ட்ரஸ், “என்னுடைய தவறான பொருளாதாரக் கொள்கையால்தான், நாட்டின் பொருளாதாரம் சிக்கலைச் சந்தித்துவருகிறது” எனச் செய்தியாளர்கள் முன்னிலையில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

அதையடுத்து நேற்றைய தினம், இங்கிலாந்தின் உள்துறை அமைச்சரான இந்திய வம்சாவளி சுயெல்லா பிரேவர்மேன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், பிரதமராகப் பதவியேற்ற 6 வாரங்களிலேயே கடுமையான சிக்கல்களை எதிர்கொண்ட லிஸ் ட்ரஸ் தன்னுடைய பதவியை இன்று ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் லிஸ் ட்ரஸ் கொண்டுவந்த பொருளாதார திட்டங்களால் இத்தகைய சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.