உயரும் மதுபானங்கள் விலை: மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

டாஸ்டாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. மது வகைகள் மீதான ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. 2020-21-ம் ஆண்டில் ரூ.33,811.15 கோடியும், 2021-22-ம் ஆண்டில் ரூ.36,013.14 கோடியும் அரசுக்கு வருவாய் கிடைத்தது.

இந்த நிலையில், இந்த வரி வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் 1937ஆம் ஆண்டு மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் மதுவிலக்கு திருத்த அவசர சட்டம் நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டு வந்த இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் (ஐ.எம்.எப்.எல்.) ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் பொருட்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம், டாஸ்மாக் உள்பட மதுபான கடைகளில் மதுபானங்கள் விலை மேலும் உயரும் என தெரிகிறது. முதலில் வெளிநாட்டு மதுவகைகள் விலை உயர்த்தப்படும்.அதன்பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என தெரிகிறது. இந்த தகவல் மதுப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுபானங்கள் மீதான வரி உயர்வினால் மதுபானங்கள் விலை உயர்வது ஒருபுறமிருக்க, நேரடியாக டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் பாட்டில்களின் விலைகளும் அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை, கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்பு, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, கடந்த மார்ச் மாதம் விலை உயர்த்தப்பட்டது.

அதன்படி, டாஸ்மாக் மதுபானக்கடைகளில் குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டது. மீடியம் மற்றும் உயர்ரக மதுபானங்களுக்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண மதுபான ரகங்களுக்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டது. மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 40 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதேபோல், ஃபுல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு 40 ரூபாய் உயர்த்தப்பட்டது. மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 80 ரூபாய் உயர்த்தப்பட்டது. பீர் வகைகள் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டது.

இது தவிர, வழக்கம் போல் குவாட்டர் ஒன்றுக்கு ரூ.10 அதிகமாக கொடுக்க வேண்டும் என்பதும் டாஸ்மாக் கடைகளில் எழுதப்படாத விதி என்பதால், மதுப்பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.