பாண்டேவெட்ரா,
23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள பாண்டேவெட்ரா நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்களுக்கான கிரீகோ ரோமன் பந்தயத்தில் 77 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற இந்திய வீரர் சஜன் பன்வாலா கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் மால்டோவா நாட்டு வீரர் அலெக்சான்ட்ரின் குதுவிடம் 0-8 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார்.
சஜனை வீழ்த்திய அலெக்சான்ட்ரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் ‘ரெபிசாஜ்’ சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்ற சஜன் பன்வாலா 9-6 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீரர் ரசுல் ஜூனிஸ்சை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்துக்கு முன்னேறினார்.
அடுத்து உக்ரைன் வீரர் டிமிட்ரோ வாசெட்ஸ்கியுடன் மல்லுகட்டினார். இதில் முதலில் பின்தங்கி இருந்த சஜன் பன்வாலா கடைசி நேரத்தில் அபாரமாக செயல்பட்டு 10-10 என்ற புள்ளி கணக்கில் சமநிலையை எட்டினார். கடைசி புள்ளியை எடுத்ததன் அடிப்படையில் சஜன் பன்வாலா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் அவருக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது. இதன் மூலம் அரியானாவை சேர்ந்த சஜன் பன்வாலா இந்த போட்டியில் கிரீகோ ரோமன் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.