கொங்கு பகுதியில் இவ்வளவு பிரச்சனைகள், திட்டங்கள் இருக்கா?! கொங்கு மக்களை பிரமிக்க வைத்த அன்புமணி!  

கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாமக தாய்வார் அன்புமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு பகுதிகளிலுள்ள பின்னல் ஆடை தொழிற்சாலைகளை மூடிக் கொண்டு வருகின்றனர். முக்கியமாக சிறுகுறு ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை மூடி இருக்கின்றார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளது. கடந்த ஆண்டு நூல் விலை  240 ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 480 ரூபாயாக உயர்ந்தது ஒரு முக்கிய காரணம். அதில் 80 ரூபாய் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்பது போதுமானதாக இல்லை. இங்கே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். 

இப்பிரச்சனைக்கு தீர்வு  காண மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். தொழிற்சாலைகள்  தொடங்க வட்டி இல்லா கடனை மத்திய அரசு தர வேண்டும். தொழிற்சாலைகளை மேம்படுத்த வேண்டும். இந்தியாவில் உற்பத்தியாகும் பின்னலாடை பொருட்களில் 70 சதவீதம் கொங்கு மண்டல பகுதியில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. கோடைகாலத்தில் வரவேண்டிய ஆர்டர் 40 விழுக்காடு குறைந்திருப்பது, வருங்காலங்களில் மிகப் பெரிய பிரச்சினையை உருவாக்கும். 

உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி, ரஷ்யா உக்ரைன் போர் போன்ற பிரச்சனை இருப்பதால், வருகின்ற ஆண்டு மேலும் பொருளாதார வீழ்ச்சி வரும் என்று சொல்கிறார்கள். இதனை எல்லாம் கவனத்தில் கொண்டு மத்திய அரசு, உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி பின்னலாடை தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வேண்டும். 

அத்திக்கடவு அவிநாசி திட்டம் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்களின் 60 ஆண்டுகால கனவு, 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், இன்னும் ஏன் முடிக்கப்படவில்லை என்று அறிக்கைகள் கடிதங்கள் வாயிலாக தொடர்ந்து முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பி வருகிறோம். 

அண்மையில் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் மழை நீர் கடலில் வீணாக கலந்தது. இந்த திட்டம் முன்னதாகவே முடிக்கப்பட்டிருந்தால் அவ்வளவு மழை நீரையும் இந்த பகுதிக்கு பயன்படும்படி கொண்டு வந்திருக்கலாம். தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக அத்திக்கடவு அவினாசி திட்டத்தை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு கொண்டு வர வேண்டும்.

அண்மையில் பரம்பிக்குளம் ஆழியாறு அணையில் இருந்து, பிஏபி வாய்க்கால் ஷட்டர் பழுதடைந்து, கிட்டத்தட்ட 12 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக வெளியேற்றப்பட்டது. இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது. அதை சரியாக கவனிக்க வேண்டும். அதேபோன்று பாண்டியாறு – புன்னம்புழா திட்டம்,  நல்லாறு திட்டம், பாம்பாறு திட்டம் போன்ற திட்டங்களை கேரளா அரசின் உதவியுடன் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.  

கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி பழமையான கல்லூரி. இப்போது கோயம்புத்தூர் மாநகரத்தில் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் தொகை உள்ளது. இதனால் கூடுதலாக ஒரு மருத்துவக் கல்லூரி கோயம்புத்தூர் பகுதிக்கு வர வேண்டும். இப்போது இருக்கின்ற மருத்துவக் கல்லூரி போதுமானதாக இல்லை. கொரோனா காலத்தில் போதிய படுக்கை வசதி இல்லாததால் தரையில் நோயாளிகள் படுத்திருந்த அவலம் ஏற்பட்டது.

நேற்று சட்டமன்றத்தில் கிட்டத்தட்ட 12 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு சட்டமன்ற கூட்டத்தொடர் என்பது குறைந்தது இரண்டு மூன்று வாரங்கள் இருக்க வேண்டும். எங்களுடைய நோக்கம் ஓர் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்றம் வேலை செய்ய வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு 30 நாட்கள் தான் சட்டமன்றம் செயல்பட்டு உள்ளது. அதற்கு முந்தையாண்டு 28 நாட்கள் தான் செயல்பட்டது. இந்த போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டும். ஒரே நாளில் 12 மசோதாக்கள் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயக நாட்டில் இருக்கின்றோம், விவாதங்கள் நடப்பதை முதலமைச்சர் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். 

நேற்று நிறைவேற்றப்பட்ட மசோதாவில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்திருக்கின்றார்கள். இதற்கு முன்பாக அவசர சட்டமாக  நிறைவேற்றப்பட்டு ஆளுநர் கையொப்பமிட்டு அது சட்டமாக இருக்கின்றது. ஆனாலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதிலும் ஆளுநர் அவர்கள் உடனடியாக கையெழுத்திட்டு முழுமையாக சட்டமாக மாற்ற வேண்டும். 

தமிழகத்தில் அதிகளவில் கஞ்சா அபின் உள்ளிட்டப் போதைப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழக முதலமைச்சர் இதற்கு சிறப்பு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அது போதுமானதாக இல்லை. போதை ஒழிப்பு பிரிவில் 20,000 காவலர்கள் தேவை உள்ள நிலையில், 500 காவலர்கள் மட்டுமே உள்ளனர். நாம் அடுத்த தலைமுறை காப்பாற்ற வேண்டும். போதைப்பொருள் பழக்கம் என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. வருங்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறக்கூடும்.

தீபாவளி பண்டிகை காலம் நெருங்கிவிட்டது. ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை தமிழக அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக சென்னைக்கும் கோவைக்கும் இடையே விமான சேவை கட்டணம் 3300 ரூபாய். ஆனால் ஆம்னி பேருந்தில் 3700 ரூபாய். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை பண்டிகை காலம் மட்டுமல்லாமல் சாதாரண நாட்களிலும் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனை குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறு சதவீதம் கொழுப்புள்ள ஆவின் பால் ஒரு லிட்டர் 48 ரூபாய் என்றால், தனியார் பால் ஒரு லிட்டர் கிட்டத்தட்ட 78 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

தனியார் பால் நிறுவனங்கள் மாபியா கும்பல் போல ஒன்றிணைந்து கொண்டு, விலையை ஏற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஓராண்டில் மட்டும் நான்கு முறை விலை ஏற்றி இருப்பது கண்டுக்கத்தக்கது. இதில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயம்புத்தூர் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த செம்மண் குவாரிகளுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தியதன் விளைவாக, குவாரிகளுக்கு 450 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலம் சட்ட விரோதமாக செயல்பட்டு கொண்டிருந்த அந்த செம்மண் குவாரிகளை, அதிகாரிகள் சரியாக கவனம் செலுத்தாமல் தொடர்ந்து செயல்பட அனுமதித்துள்ளனர். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது தவறான போக்கு. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டுமென்று தொடர்ந்து மருத்துவர் அய்யா அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. எங்களுடைய போராட்டத்தினால் தான், இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கொள்கை ரீதியில் பூரண மதுவிலக்கை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். 

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட தகவலின் படி, தமிழக அரசுக்கு வரக்கூடிய வருவாயில் 33 சதவீதம் டாஸ்மார்க் மூலமாக வந்து கொண்டிருக்கிறது. இது நாட்டின் வளர்ச்சி என நாம் எடுத்துக் கொள்ள முடியாது. இது நாட்டின் வீழ்ச்சியாக மட்டுமே இருக்க முடியும். 

அரசுக்கு வருமானம் 33 விழுக்காடு என எடுத்துக்கொண்டால் இழப்பு சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது. உதாரணத்திற்கு தமிழக அரசுக்கு டாஸ்மார்க் மூலம் 40,000 கோடி ரூபாய் வருமானம் என்றால், அரசுக்கும், தனியாருக்கும் இந்த மதுவால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

டாஸ்மார்க் விற்பனைக்கு இலக்கு வைப்பதற்கு பதிலாக, கல்விக்கு இலக்கு வையுங்கள். ஆண்டுக்கு தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு இத்தனை மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு வையுங்கள். குழந்தைகளுக்கு 100% தடுப்பு ஊசி செலுத்த வேண்டும் என்ற இலக்கை வையுங்கள். இதுபோன்ற இலக்குகளை நிர்ணயிங்கள். ஆனால் குடிப்பதற்கு தயவு செய்து இலக்கு வைக்காதீர்கள். இது நாட்டுக்கு, தமிழக அரசுக்கு கேடு. கேடோ கேடு!

காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பரம்பிக்குளம் – ஆழியாறு, பாண்டியாறு – புன்னம்புழா திட்டம் எல்லாம் இரண்டு மாநில பிரச்சனை. கம்யூனிஸ்ட் கட்சி இங்கு ஆளுங்கட்சியுடன் கூட்டணியாக இருக்கிறார்கள். கேரளாவில் ஆளுங்கட்சியாக உள்ளனர். இது கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சனை கிடையாது. இது தமிழ்நாட்டுக்கும், கேரள மாநிலத்துக்கும் இடையேயான பிரச்சினை. இரண்டு மாநிலங்களும் சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும். தமிழக முதலமைச்சர், கேரள முதலமைச்சர் நேரில் சந்தித்து, முல்லை பெரியாறு திட்டம், பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம், பாண்டியாறு-பொன்னம்பிழா திட்டங்கள் பற்றி விளக்கி, சரி செய்ய வேண்டும். இரு மாநிலங்களும் தண்ணீரைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை பற்றி என்னுடைய தனிப்பட்ட கருத்தை மட்டுமே இங்கு தெரிவிக்கிறேன். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ஒரு ப்ரொபஷனலாக இல்லை. இதனை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றால் ஒன்றுமே ஆகாது. இதில் தொழில்நுட்பமான விஷயங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. இதை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம். அதற்கு மேல் இதில் ஒன்றும் இல்லை.

அதிமுகவினர் இரு தரப்புகளாகப் பிரிந்து போராட்டம் நடத்தி வருவது அவர்களுடைய கட்சியின் பிரச்சனை. சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஏனென்றால் அதிமுகவின் 66 எம்எல்ஏக்களில், 62 எம்எல்ஏக்கள் ஒரு பிரிவில் இருக்கின்றார்கள். 4 எம்எல்ஏக்கள் தான் மற்றொரு பிரிவில் இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. எண்ணிக்கைக்கு ஏற்ப சபாநாயகர் நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும்.

நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் அறிக்கையில், கிட்டத்தட்ட 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆணைய அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். 

அதே சமயத்தில் ஆணையத்தின் அறிக்கையை முழுமையாக பார்த்த பின்பு, அதற்கான என்னென்ன சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இந்த ஆணையத்தின் அறிக்கையை ஒரு பாடமாக வைத்து, காவல்துறை இதில் கற்றுக் கொள்ள வேண்டும். மனித உயிர்கள் விலை மதிப்பற்றது. கண்மூடித்தனமாக மனிதர்களை யாரும் தாக்க கூடாது. சாதாரணமாக ஒரு மனிதனை அடிக்கவே கூடாது. துப்பாக்கியால் சுடுவது என்பது உச்சக்கட்டம். காவல்துறைக்கு இது ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். வருங்காலங்களில் காவல்துறை சரியாக நடந்து கொள்ள வேண்டும்.

எங்களுடைய மாவட்டச் செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, ஒரு அரசு பள்ளிக்கூடத்தை தத்தெடுத்து, வகுப்பறையை முழுமையாக ‘மாடல் கிளாஸ் ரூம்’ ஆக மாற்றி இருக்கிறார். அதனை தமிழக அரசு பின்பற்றி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிக்கூடத்திலும் வகுப்பறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

நேற்று முதலமைச்சர் பள்ளி வகுப்பறைகளை கட்டுவதற்கு கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக அறிவித்தார்கள். அரசு வகுப்பறை கட்டிடத்தை எல்லாம், ஒரு மார்டன் வகுப்பறைகளாக மாற்றியமைக்க வேண்டும். அதற்கு முன்னோடியாக ‘பாட்டாளி மாடல்’ வகுப்பு அறைகளை தமிழக முதலமைச்சர் ஏற்று, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்பான கோரிக்கையாக வைக்கிறேன்” என பேசினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.