திருச்சி: திருச்சி லால்குடி செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் மார்ட்டின் மேரி(50). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சப்போட்டா பழத்தை அருகில் உள்ளவரிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சப்போட்டா விதை அவரது மூச்சுக் குழல் வழியாக நுரையீரலில் சென்று நின்றது. அதன் பின் அவருக்கு அடிக்கடி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 13ம் தேதி சிகிச்சைக்காக வந்தார். ஸ்கேன் எடுத்து பார்த்ததில், நுரையீரலின் அடியில் சப்போட்டா விதை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த விதையை சுற்றி கொஞ்சம் சதையும் வளர்ந்து அதை மூடி இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவர் பழனியப்பன், மருத்துவர் சுந்தரராமன் மற்றும் மயக்கவியல் மருத்துவர் சுரேஷ், தலைமை மயக்கவியல் மருத்துவர்கள் சீனிவாசன், அறிவரசன் ஆகியோர் அடங்கிய குழு இணைந்து நவீன கருவி மூலம் தொண்டையில் நுண்துளையிட்டு அதன் வழியாக நுரையீரல் அடியில் சிக்கி இருந்த சப்போட்டா விதையை பாதுகாப்பாக அகற்றினர்.
அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் கூறுகையில், இந்த சிகிச்சையை ஒரு பெரிய மருத்துவக் குழு இணைந்து வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. ஒருவேளை இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்திருந்தால் குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்திலிருந்து 7 லட்சம் வரை செலவாகி இருக்கும். இந்த நோயாளியின் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது, சாப்பிடும் போது பேசுவதோ, சிரிப்பதோ, கட்டாயமாக செய்யக்கூடாது என்றனர்.