லண்டன்: பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரி ரத்து செய்த விவகாரத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்துள்ளார் லிஸ் ட்ரஸ்.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள டவுனிங் சாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் லிஸ் ட்ரஸ் பேசும்போது, “கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக நான் தேர்தெடுக்கப்பட்டதற்கான நோக்கத்தை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக நான் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து மன்னர் சார்லஸிடம் பேசியுள்ளேன். அடுத்த வாரத்திற்குள் கட்சி தலைமைத் தேர்தல் நடத்தப்படும். இது நமது நிதித் திட்டங்களை வழங்குவதற்கும், நமது நாட்டின் பொருளாதார உறுதித்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பை வலுப்பத்தவும் உறுதி செய்யும்” என்றார்.
பிரிட்டனின் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ், பிரிட்டனின் மந்தமான பொருளாதாரத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை ஈடுபட்டார். அந்த வகையில் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், லிஸ் ட்ரஸின் இந்த முடிவு பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்த உதவவில்லை. மாறாக, அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனால், டாலருக்கு நிகரான பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு குறைந்து வருகிறது. பங்குச் சந்தை மதிப்புகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. விலைவாசியும் நாளும் அதிகரித்தது. தனது தவறான பொருளாதார கொள்கைகளுக்கு லிஸ் ட்ரஸ் மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னதாக, பொருளாதாரத்தை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டில்தான் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பொருளாதார மந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க முடியாத வகையில்தான் அவரது நிர்வாகத் திறன் இருந்துள்ளது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
பிரிட்டன் அரசியல் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பிரதமர் பதவி வகித்தவர் லிஸ் ட்ரஸ்தான். இரு மாதங்கள் கூட நிறைவு பெறாத நிலையில், அவர் அங்கம் வகிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியால் மீண்டும் ஒரு பிரதமரை உடனடியாக தேர்வு செய்ய முடியுமா என்ற சந்தேகமும் குழப்பமும் பிரிட்டனில் நிலவுகிறது.
இந்தக் குழப்பத்தை வலுப்படுத்தும் வகையில், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆட்சியை தொடர்ந்து நடத்த உரிமை இல்லை என்றும், நாட்டில் பொதுத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி குரல் எழுப்பியுள்ளது.