ஹெல்மெட் போட்டு இருந்தாலும் பின் சீட்டில் இருப்பவர்களுக்கு இனி அபராதம்!

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன்  பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய போக்குவரத்து விதியை சென்னை போக்குவரத்து காவல் துறை இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்துகிறது.  இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழகத்தில் தான் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. குறிப்பாக கடந்தாண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 1026 பேர் சாலை விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்.  சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் புது திட்டத்தையும் அமல்படுத்தி வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தில், தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு மட்டும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி 10,000 அபராதம் விதிக்கப்பட்டு அவை நீதிமன்றம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன.  

கடந்தாண்டு மட்டும் சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவதாலேயே அதிக விபத்துகள் நிகழ்வதால் அதை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.  அந்த வகையில் இன்று முதல் சென்னையில் புதிய போக்குவரத்து விதி அமலுக்கு வந்துள்ளது. அதாவது  வழக்கமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபரிடம் மட்டுமே போக்குவரத்து போலீசார் அபராத தொகை பெற்று வந்தனர். ஆனால் தற்போது வாகன ஓட்டுனர் குடிபோதையில்  இருந்து, பின்னால் அமர்ந்து செல்வோர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இதன் மூலம் இருவரிடமும் அபராதம் வசூல் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதே போன்று கார் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது 

மேலும் தெரிந்த ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனருடன் பயணம் செய்யும் போது அந்த ஓட்டுனர் மதுபோதையில் இருந்தால் பின் அமர்ந்து இருப்பவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும், ஆனால் சவாரி செல்லும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.  மோட்டார் வாகன சட்டம் 185 r/w 188 MV விதிப்படி இந்த அபராதமானது வசூல் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.  இதற்கு முக்கிய காரணம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்கள் என தெரிந்து அவர்களுடன் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் உடன் பயணிப்பவர்கள் குடித்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக போக்குவரத்துக்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று நல்லிரவு முதல் இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் அபராதம் விதிக்கப்படுவதாகவும் சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.