உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை டேராடூன் விமான நிலையம் சென்றடைந்த அவரை மாநில ஆளுநர் குர்மீத் சிங், முதல்வர் புஸ்கர் சிங் தாமி உள்ளிடேடோர் வரவேற்றனர்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்ற அவர், அங்குள்ள சிறப்புமிக்க சிவாலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தார். அத்துடன் அங்கு ஆதிசங்கரர் முக்தி அடைந்ததாக கூறப்படும் இடத்திலும் வழிபாடு மேற்கொண்ட மோடி, சிறிது நேரம் தியானத்திலும் ஆழ்ந்தார்.
தமது இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக கேதார்நாத்-கவுரிகுண்ட் இடையே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ள ரோப்கார் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
கேதார்நாத்தில் சுமார் 3 மணி நேரம் செலவழித்த அவர், அதன்பின் அங்கிருந்து பத்ரிநாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெற்றுவரும் ஆலயத் திருப்பணிகளை மோடி நேரில் ஆய்வு செய்தார்.
கேதர்நாத், பத்ரிநாத் ஆலய வழிபாட்டுக்கு பிறது, பிற்பகல் உத்தரகாண்ட் மாநில சீன எல்லையில் அமைந்துள்ள மனா கிராமத்துக்கு சென்று பிரதமர் மோடி, அங்கு மொத்தம் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் அவர் சிறப்புரை ஆற்றினார்.
கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி என உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள நான்கு புகழ்பெற்ற திருத்தலங்களுக்கு சார்தாம் யாத்திரை என்றழைக்கப்படும் ஆன்மிக யாத்திரையை பக்தர்கள் மேற்கொள்வது வழக்கம். மே மாதம் முதல் அக்டோபர் வரையிலான கோடை காலத்தில் மட்டும் இந்த ஆலயங்கள் திறக்கப்பட்டிருக்கும்; குளிர் காலத்தில் இந்த கோவில்கள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.