பாஸ்போர்ட் ஓகே…  விசாவுக்கு வெய்ட்டிங்! – 'ப்ரின்ஸ்' திரை விமர்சனம்

டிரெய்லரைப் பார்த்து நாம் அனைவரும் யூகித்த ஒன்லைன் தான் ப்ரின்ஸ் படத்தின் ஒன்லைனும். ஆம், வேற்று நாட்டுப் பெண்ணைக் காதலிக்கும் நாயகனுக்கு வரும் சிக்கல்களே இந்த ப்ரின்ஸ்.

அன்புவின் கிராமத்தில் எல்லா நல்லது கெட்டதையும் பேசியே தீர்த்து வைக்கும் நபர் உலகநாதன்.  ஊரின் ஆகப்பெரும் புரட்சியாளரான உலகநாதனின் ஒரே குறிக்கோள் தன் குடும்பத்தில் பிறந்தவர்கள் அவர் சார்ந்த சாதியில், மதத்தில் திருமணம் செய்துவிடக்கூடாது என்பதுதான். அதே ஊரில் இருக்கும் ஜெஸ்ஸிக்காவின் தந்தையின் பூர்விக இடத்தைக் குறிவைக்கிறார் பூபதி.

image

அன்பு ஆசிரியராக ‘வேலை பார்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும்’ அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலைக்குச் சேர்கிறார் ஜெஸ்ஸிக்கா.  சோஷியல் டீச்சர் அன்பு,  இங்கிலிஷ் டீச்சர் ஜெஸ்ஸிக்காவுடன் சோஷியலாகிறார். ஆனாலும், காதலிக்க ஜெஸ்ஸிக்காவுக்குக் காரணங்கள் தேவைப்படுகிறது. பிறகு, முதல் பாதிக்கு ஏதாவது காட்சிகள் வைத்தாக வேண்டுமே. அதனாலயே கொஞ்சம் ஜாலி, கொஞ்சம் கேலி, கொஞ்சம் மொக்கை என காட்சிகள் நகர்கிறது.

image

எல்லை தாண்டிய காதலுக்கு க்ரீன் சிக்னல்தான் என்று காட்சிகள் நகர, இடைவேளையில் அன்புவுக்கு ஒரு ஷாக் கொடுக்கிறார் அப்பா உலகநாதன். இதற்கிடையே ஜெஸ்ஸிக்காவின் தந்தையின் நிலத்தைக் குறிவைக்கும் பூபதி, உலகநாதனை அன்புவுக்கு எதிராகத் திருப்பிவிடுகிறார். இவற்றை சமாளித்து தன் காதல் கைகூட அன்பு என்னென்ன செய்கிறார் என்பதே ப்ரின்ஸ்.

image 

அன்புவாக சிவகார்த்திகேயன். பள்ளி மாணவர், காலேஜ் ஸ்டூடண்ட் வரிசையில் கொஞ்சம் அப்கிரேடாகி பள்ளி ஆசிரியராக இந்தப் படத்தில் வருகிறார். வழக்கமாக சட்டெனக் கலாய்த்துச் சிரிக்க வைக்கும் எஸ்கே இதில் கொஞ்சம் ‘கிரேஸி மோகன்’ டைப் காமெடிக்குத் தாவியிருக்கிறார். அது படத்தில் ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கிறது. ஆனால் அது அவர் சொல்லும்போது மட்டும்தான் ஒர்க் அவுட் ஆகிறது என்பது கொஞ்சம் மைனஸ். நடனத்தில் வழக்கம்போல கண்களை எடுக்க விடாமல் பார்க்க வைத்திருக்கிறார். ஜெஸ்ஸிக்காவாக உக்ரைன் நடிகை மரியா. மரியாவின் சிரிப்பு அவ்வளவு இயல்பாக இருக்கிறது. மிகவும் க்யூட்டாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.

image

நடனத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஈடுகொடுத்து ஆடியிருக்கிறார். உலகநாதனாக சத்யராஜ். ஜாதி மதம் தாண்டிய திருமணத்துக்குத்தான் என் ஆதரவு என்று சொல்வதன்மூலம், இயக்குநர் சொல்லும் மெசேஜ், சத்யராஜ் போன்ற இயல்பிலேயே அந்த எண்ணம் கொண்ட நடிகருக்கு மிக நன்றாகவே பொருந்துகிறது. அந்த மெசேஜுக்காக படக்குழுவுக்குப் பாராட்டுகள். ஆனால் சத்யராஜ் திடீரென்று சீரியஸாகவும் மாறி, சீரியஸுக்குள் காமெடியும் செய்து அவரது  கதாபாத்திரம் சீரியஸா காமெடியா என்கிற குழப்பம் அவரைப் போலவே நமக்கும் படம் முழுக்க இருக்கிறது. 

image 

அன்புவின் நண்பர்கள் பிராங்ஸ்டர் ராகுல், ஃபைனலி பாரத், டான்ஸ் மாஸ்டர் சதீஷ். பலரின் நிலங்களைப் பறித்து தன் கைக்குள் போட்டுக்கொள்ளும் குரூர கொடூர வில்லன் பூபதி ப்ரேம்ஜி அமரன் . என்ன எல்லாமே காமெடியாக இருக்கிறதே , யார் தான் சீரியஸாக இருப்பார்கள் என கேமராவை இன்னும் கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்பினால் தேவனகோட்டையின் DROவாக சுப்பு பஞ்சு. ஊர்ல ஒரு பிரச்சினை என்றால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தானே அதைத் தீர்த்து வைக்கமுடியும். அவராவது சீரியஸாக இருப்பாரா என்றால் அதுவும் ஆனந்த்ராஜ்.

இப்படி திரும்பும் பக்கமெல்லாம் மறந்து கூட சீரியஸான நபர்கள் இல்லாமல் காமெடி நடிகர்களை வைத்தே பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், இத்தனை நடிகர்கள் இருந்தும், காமெடி படத்துக்கு சிவாவை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை. அவர் இல்லாத காட்சிகளின் காமெடி.. திணறல்.

image 

தமன் இசையில் பாடல்கள் ஆடியோவிலேயே மொரட்டு ஹிட். ஜெஸ்ஸிக்கா ஜெஸ்ஸிக்காவும், பிம்பிளிக்கா பிலாப்பியும் திரையிலும் அவ்வளவு கலர்ஃபுல்லாய் இருக்கின்றன. ஷோபி, அனிருத், விவேக் என கூட்டணி போட்டு செய்ததில் டான்ஸ், லைட்டிங், கலர்ஸ், ஜாலி லிரிக்ஸ் என எல்லாமே பக்காவாய் அமைந்திருக்கிறது. அனுதீப்பின் முந்தைய படமான ஜதி ரத்னலாவும் மூளையைக் கழற்றி வைத்துவிட்டுப் பார்க்கும் brainless காமெடி வகைதான் என்றாலும், இதில் சில விஷயங்கள் செட் ஆகவில்லை.

சில ஒன்லைனர்கள் சிரிக்க வைக்கின்றன. சில சோதிக்க வைக்கின்றன. முன்பெல்லாம் பாடல்களுக்குத்தான் எங்கேயோ கேட்டது மாதிரி இருக்கின்றது என்று தோன்றும். பிரின்ஸிலோ காமெடி வசனங்களே ஏற்கெனவே கேட்டதுபோல இருக்கின்றன. அதையே நக்கல் அடிக்கும் தொனியில் ஆனந்த்ராஜ் சொல்லும் வசனம் செம்ம. சத்யராஜுக்கு கனவு காட்சிகள் எல்லாம் டூ  மச் ப்ரோ. ‘கும்முரு டப்புரு’மாதிரிலாம் எழுதறானுக என்று சிவாவிடமே சத்யராஜ் கோவப்படுவது செம. 

image 

பாட்டில் கார்ட், known unknown, தேசம்- ஹ்யுமானிட்டி, கும்முரு டப்புரு – அலமத்தி அபிபோ என்று பல விஷயங்கள் சட் சட்டென்று கவர்கின்றன. ஆனாலும் பாதி ஆடியன்ஸ் ‘இன்னொருக்கா பார்த்தா சிரிக்கலாம்’ நிலையிலேயே அமர்ந்திருப்பதால் பாஸ்போர்ட் வாங்கிவிட்டாலும் விசாவுக்கு வெய்ட்டிங்கில் இருக்கிறான் இந்த ப்ரின்ஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.