திருமலை: திருமலையில் காற்றில் மாசு கலப்பதை கட்டுப்படுத்தும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்தது. லட்டு பிரசாதம் கூட சணல் பைகளில் விநியோகிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகளும் பேட்டரி கார்களை உபயோகிக்க தொடங்கினர். இந்நிலையில், திருப்பதி – திருமலை இடையே அரசு பேட்டரி பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போது திருப்பதி-திருமலை இடையே 35 பேட்டரி அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பிரம்மோற்சவத்தின்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேட்டரி பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில், ரூ.15 கோடியில் 10 ஒலக்ட்ரா பேட்டரி பஸ்களை ஒலக்ட்ரா பேட்டரி பஸ் நிறுவனர் கிருஷ்ணா ரெட்டி தேவஸ்தானத்திற்கு இலவசமாக வழங்கினார்.
இதையடுத்து திருமலையில் இயக்கப்பட்டு வரும் தர்ம ரதம் பஸ்களுக்கு பதிலாக நேற்று முதல் பேட்டரி பஸ்களின் இயக்கம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி பேசும்போது, “திருமலையில் மாசு ஏற்படுவதை தடுக்கும் விதத்தில், அடுத்த கட்டமாக டாக்ஸிகள் அனைத்தும் பேட்டரி கார்களாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். இதற்காக வங்கிக் கடன் மூலம் கார்களை வழங்கிடவும் தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.