ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான போந்தவாக்கம், பெரிஞ்சேரி, சீத்தஞ்சேரி, அனந்தேரி, பேரிட்டிவாக்கம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் பொருட்கள் வாங்க வருகின்றனர். இதனால் ஊத்துக்கோட்டை பஜாரில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதனிடையே கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் போன்றவை நடைபெறும் என்பதற்காக அதை தடுப்பதற்காக ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் உள்ள அண்ணாசிலை அருகில் ஊத்துக்கோட்டை காவல்துறை சார்பில், முதன்முறையாக கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘’தீபாவளி பண்டிகை முடியும் வரை தினமும் ஒரு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்’ என இன்ஸ்பெக்டர் ஏழுமலை தெரிவித்தார்.