20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

சிட்னி,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதும் முதல் ஆட்டத்திற்கு வருணபகவான் வழிவிடுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

சூப்பர்12 சுற்று

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்றுடன் முதல் சுற்று நிறைவடைந்தது. முதல் சுற்று முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறி மற்ற 8 அணிகளுடன் இணைந்தன.

சூப்பர்12 சுற்றில் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும் குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

மழை மிரட்டல்

சூப்பர்12 சுற்று போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. பிரதான அணிகள் களத்தில் குதிப்பதால் இனி தான் உண்மையான நீயா-நானா? யுத்தத்தை ரசிகர்கள் பார்க்கப்போகிறார்கள். சூப்பர்12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. ஆனால் சிட்னியில் தற்போது விளையாட்டுக்கு உகந்த சீதோஷ்ண நிலை இல்லை. சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அது, நேற்று வீரர்களின் பயிற்சிலும்சற்று பாதிப்பை ஏற்படுத்தியது.

போட்டிக்குரிய இன்றைய தினமும் சிட்னியில் கன மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த ஆட்டம் ரத்தாகலாம் அல்லது குறைந்த ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்படலாம்.

வில்லியம்சன் கருத்து

மழை அச்சுறுத்திக்கொண்டிருப்பதால் இரு அணிகளும் தங்களது ஆடும் லெவன் பட்டியலை வெளியிடவில்லை. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கைவிரலில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் தவிர மற்ற அனைவரும் போதுமான உடல்தகுதியுடன் உள்ளனர். நாங்கள் இன்னும் சிட்னி ஆடுகளத்தை பார்க்கவில்லை. இன்று (நேற்று) காலை ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்தது. களம் காணும் லெவன் அணியை முன்கூட்டியே அறிவிக்கமாட்டோம். ஏனெனில் ஆட்டத்தில் ஓவர் குறைக்கப்பட்டால் அதற்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டியது இருக்கும்’ என்றார்.

தனது அண்டை நாடான ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி 2011-ம் ஆண்டுக்கு பிறகு எந்த வடிவிலான போட்டியிலும் வீழ்த்தியதில்லை. இது குறித்து வில்லியம்சனிடம் கேட்ட போது, ‘இது போன்ற புள்ளி விவரங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் முயற்சியை தடுக்கப்போவதில்லை. எங்கள் அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் உள்ளனர். கடும் சவால் அளிப்பதை எதிர்நோக்கி இருக்கிறோம்’ என்றார்.

நியூசிலாந்து அணியில் டிவான் கான்வேவுடன் பின் ஆலென் அல்லது மார்ட்டின் கப்தில் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார்கள். மிடில் வரிசையில் கேப்டன் வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, பெர்குசன், சோதி நம்பிக்கை அளிக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா எப்படி?

சொந்த மண்ணில் எந்த அணியும் உலக கோப்பையை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி அமைக்கும் உத்வேகத்துடன் தனது பயணத்தை தொடங்கும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு உள்ளூர் சூழல் சாதகமான அம்சமாக இருக்கும். பேட்டிங்கில் டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், டிம் டேவிட், மிட்செல் மார்ஷ், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட், கம்மின்ஸ் உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். அதே சமயம் ஸ்டீவன் சுமித்துக்கு அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறும் போது, ‘இந்த ஆட்டத்தில் நான் தொடக்க ஆட்டக்காரராக இறங்க உள்ளேன். ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு இடம் இருக்காது. மற்ற வீரர்களின் விவரத்தை இப்போதே தெரிவிக்க முடியாது. ஏனெனில் மழை பெய்வதற்குரிய சூழல் நிலவுவதால், போட்டியில் ஓவர் குறைப்பு இருக்க வாய்ப்புள்ளது. அதற்கு ஏற்ப பேட்டிங்கில் மாற்றம் செய்ய வேண்டியது வரும்’ என்றார்.

பகல் 12.30 மணிக்கு…

இவ்விரு அணிகளும் இதுவரை இருபது ஓவர் கிரிக்கெட்டில் 15 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10-ல் ஆஸ்திரேலியாவும், 4-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றது. டையில் முடிந்த மற்றொரு ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் நியூசிலாந்து வெற்றி கண்டது.

கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. அதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க நியூசிலாந்து தீவிரம் காட்டுவதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மற்றொரு ஆட்டம்

பெர்த்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் (மாலை 4.30 மணி) ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. வானிலை தகவல்படி பெர்த்தில் மழை ஆபத்து இருக்காது என்று தெரிகிறது.

ரஷித்கான், முஜீப் ரகுமான், முகமது நபி ஆகிய ஆப்கானிஸ்தானின் மும்முனை சுழல் தாக்குதலை இங்கிலாந்து திறம்பட சமாளிக்குமா என்பதே எதிர்பார்ப்பாகும். இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு நேருக்கு நேர் சந்தித்த இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்தே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.