பிக்பாஸ் சீசன் 6 தமிழ் களேபரத்தில் சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் நாள்தோறும் ஏதாவது ஒரு பஞ்சாயத்து செய்து பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பை கொடுத்து வருகின்றனர். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் பிக்பாஸ், வீட்டில் களேபரம் நடக்க வேண்டும் என்பதற்காகவே, அதற்கேற்றார்போல் டாஸ்கை கொடுத்து கொண்டிருக்கிறார். கதை சொல்லும் நேரம் டாஸ்கை முடித்த கையோடு நம்பர் டாஸ்க் ஒன்றை கொடுத்தார் பிக்பாஸ். அதில் பெரும் சண்டையே செய்துவிட்டார் அசீம்.
நம்பர் டாஸ்கில் கதை சொல்லும் நேரம் டாஸ்கில் வெற்றி பெற்ற 8 பேரை தவிர, மீதம் இருந்த 13 போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் அடுத்தவார தலைவர் போட்டிக்கு தகுதியானவர்கள் என்றும், கடைசி 2 இடங்களை பிடிப்பவர்களை ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என நிபந்தனையுடன் டாஸ்க் தொடங்கியது. முதல் இடத்தில் மகேஷ்வரி நின்று கொள்ள, இரண்டாம் இடத்தில் சாந்தி என ஒவ்வொருவராக தங்களுக்கு விருப்பமான நம்பர் பின்பு நின்று கொண்டனர். ஆனால், அசீம் தனக்கு தகுதியான நம்பரில் வேறு போட்டியாளர்கள் நிற்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முதல் 11 நம்பர்கள் முன்பு இருந்த அத்தனை பேரையும் நீ என்ன செய்தாய், நீ வேஸ்ட், பிக்பாஸூக்கே தகுதியில்லாதவர் நீ என மிக கடுமையான வார்த்தைகளில் வசைமாரி பொழிந்தார். இதில் அனைத்து போட்டியாளர்களும் கடுப்பானாலும், விக்ரமன் மற்றும் ஆயிஷாவிடம் மிகவும் உச்சக்கட்ட மோதலில் ஈடுபட்டார் அசீம். விக்ரமன் கன்னியக்குறைவாக பேச வேண்டாம் என்று கூறியும் கேட்காத அசீம், வாய்க்கு வந்த வார்த்தையெல்லாம் கொட்டி தீர்த்தார். அடுத்த ரவுண்டில் அப்படியே ஆயிஷா பக்கம் சென்ற அசீம், வாடி … போடி என உச்ச துதியில் வசைபாட, பொறுமை இழந்த ஆயிஷா கணத்த குரலில் என்னை அப்படி கூப்பிடாதே என கூறி செருப்பை கழற்றிவிட்டார். இதனால் பிக்பாஸ் வீடு உச்சக்கட்ட களேபரத்திற்கு சென்றது.
பின்னர் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக நம்பர் வரிசைபடுத்திக் கொண்டு ராமையும், ஜனனியையும் சிறைக்கு அனுப்பிவிட்டனர். இது குறித்து கமல்ஹாசன் வார இறுதிநாளான இன்று விவாதிப்பார் என கூறப்படுகிறது. விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு சவுக்கெடுப்பார் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.