சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.அந்தவகையில் சென்னை எம்ஜிஆர் நகரிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் இருக்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் உதவி ஆசிரியராக தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (24) என்ற இளைஞர் பணியாற்றினார். இவர் நேற்று இரவு பணி முடிந்து தனது அறைக்கு சென்றுள்ளார். அப்போது சென்னை எம்ஜிஆர் நகரில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.இதில் பள்ளத்தில் உள்ள இரும்பு கம்பிகள் முத்துக்கிருஷ்ணனின் உடல் முழுவதும் குத்தி படுகாயம் அடைந்தார்.
உடனே படுகாயமடைந்த முத்துக்கிருஷ்ணனை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். மேலும் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரடியாக இராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை அளிக்குமாறு தெரிவித்தார். தொடர்ந்து பல மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்காக பலரும் ரத்தம் கொடுக்கவும் முன்வந்தனர்.
ஆனால் முத்துக்கிருஷ்ணன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஊடக உலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் இதுபோன்ற பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் முறையான அறிவிப்பு பலகைகளோ, எச்சரிக்கை பலகைகளோ வைக்கப்படவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இனியாவது தோண்டப்பட்ட பள்ளத்தில் எந்த உயிரும் போய்விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் மேலும் முத்துக்கிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.