வயது அதிகமான பெண்ணுடன் திருமணம்… கணவனுக்கு ஆயுள் குறையுமா? |காமத்துக்கு மரியாதை – S 3 E 13

பல காலங்களாகத் தொடர்ந்து ஒரு பழக்கத்தை ஃபாலோ செய்து வரும்போது, அதுதான் சரி என்று நாம் அனைவரும் நினைத்துக் கொள்வோம். அந்தப் பழக்கத்தில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டாலும், `அதனால் ஏதாவது பிரச்னை வந்து விடுமோ’ என்று பயப்படுவோம். இவையிரண்டும் மனித இயல்புதான். இப்படிப்பட்ட  விஷயங்களில் ஒன்றுதான் ‘தன்னைவிட  வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்தால் ஆயுள் குறைந்து விடும்’ என்கிற அச்சமும்… இந்த அச்சம் குறித்து   தெரிந்துகொள்ள மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம் பேசினோம். 

பாலியல் நிபுணர் நாராயண ரெட்டி

“கணவனுக்கு வயது குறைவாகவும், மனைவிக்கு வயது அதிகமாகவும் இருப்பதை மே – டிசம்பர் ரிலேஷன்ஷிப் என்போம். கணவனுக்கு வயது அதிகமாகவும், மனைவிக்கு வயது குறைவாகவும் இருக்கையில், எப்படி மனைவிக்கு எந்தப் பிரச்னையும் வராதோ, அதேபோல கணவனுக்கும் எந்தப் பிரச்னையும் வராது. ஒருவருடைய ஆயுள் நீள வேண்டுமென்றால், அவருடைய உடலும் மனதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், அவ்வளவுதான். 

சரி, இதனால் மருத்துவரீதியாகவும் எந்தப் பிரச்னையும் வராது என்பதே உண்மை. ஒருவேளை வயது இடைவெளி சற்று கூடுதலாக இருந்தால், பெண்ணுடைய ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறையும்போது, அவருடைய பிறப்புறுப்பில்  வழுவழுப்புத்தன்மையும்  குறையும். இதைச் சரிசெய்வதற்கு, உறவின்போது கணவன், மனைவிக்குக் கூடுதலாகத் தூண்டுதல் கொடுக்க வேண்டும்.  லூப்ரிகேஷன் க்ரீம்களையும் பயன்படுத்தலாம்.

sex education

திருமண உறவில் தாம்பத்திய உறவு ஒரு பகுதி மட்டுமே. இதைத் தாண்டி, சம்பந்தப்பட்ட தம்பதியரைப் பொறுத்து எத்தனை எத்தனையோ உணர்வுரீதியான பகிர்தல்கள் இருக்கும். அவையெல்லாம் சரியாக இருந்தால், வயது வித்தியாசம் ஒரு விஷயமே கிடையாது. தவிர, தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை ஓர் ஆண் எந்தக் காரணத்துக்காக நேசிக்கிறான்; தன்னைவிட வயதில் குறைந்த ஆணை ஒரு பெண் எந்தக் காரணத்துக்காக நேசிக்கிறாள் என்பதே, அந்த தாம்பத்தியத்தை நீட்டிக்கச் செய்து விடும். பெண்ணை பொறுத்தவரைக்கும் வயது குறைவான கணவன் அமைந்தால், தாம்பத்திய வாழ்க்கை கூடுதல் இனிமையாக இருக்கும். மற்றபடி, வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் ஆயுள் குறையும் என்பதில் உண்மை இல்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.