லடாக்: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை லடாக்கில் உள்ள கார்கிலில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வரும் பிரதமர் மோடி, “கார்கிலில் நடந்த யுத்தம், தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது” என்று தெரிவித்துள்ளார். மேலும், ராணுவ வீரர்களின் மத்தியில் இருப்பது தனது தீபாவளியை சிறப்பாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும் ராணுவ வீரர்களுடன் இணைந்து பிரதமர் மோடி கொண்டாடி வருகிறார். இந்த முறை தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி திங்கள்கிழமை காலை கார்கில் சென்றடைந்தார். இதுகுறித்து பிரதமர் அலுலகம் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “நம்முடைய வீரம்மிக்க ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட பிரதமர் மோடி கார்கில் சென்றடைந்தார்” என்று தெரிவித்திருந்தது.
ராணுவ வீரர்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில், “பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தம். கார்கில் போர், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கார்கிலில் நடந்த போரில் நமது படை, பயங்கரவாதத்தை முறியடித்தது. அதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன். நான் இங்கு வந்தபோது ராணுவ வீரர்களுடன் நான் இருக்கும் என்னுடைய பழைய புகைப்படங்கள் காட்டப்பட்டன. அதற்காக நான் அவர்களுக்கு நன்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ராணுவ வீரர்கள் என்னுடைய குடும்பத்தினர். உங்களுக்கு மத்தியில் இருக்கும்போது தீபாவளி பண்டிகை இனிமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது” என்று பிரதமர் பேசினார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டதில் இருந்து ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவதை பிரதமர் வழக்கமாக கொண்டுள்ளார். 2014-ம் ஆண்டு சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
2015-ம் ஆண்டு, கடந்த 1965-ம் ஆண்டு பஞ்சாப் பாகிஸ்தான் போரில் இந்திய ராணுவத்தின் சாதனையை குறிக்கும் 50ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில், பஞ்சாப் சென்றார். 2016-ம் ஆண்டு இந்திய சீன எல்லைப்பகுதிக்குச் சென்று பாதுகாப்பு படைவீரர்களுடனும், 2017-ம் ஆண்டு வடக்கு காஷ்மீரில் உள்ள குரீஸ் பகுதிக்குச் சென்று தீபாவளியைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியாவில் நடந்த “தீப உற்சவ” விழாவில் கலந்து கொண்டார். சரயு நதிக்கரையில் நடந்த இந்த விழாவில் 15 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.