கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவை உக்கடம் அருகேயுள்ள, கோட்டைமேட்டில் பழமை வாய்ந்த சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கடைகள்,குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில்,கடந்த 23-ம் தேதி அதிகாலை கோட்டைமேட்டில் இருந்து டவுன்ஹால் நோக்கி ஒரு மாருதி கார் வந்தது.இந்தக் கார் சங்கமேஸ்வரர் கோயில் அருகேயுள்ள வேகத்தடையின் மீது ஏறி இறங்கிய போது, திடீரென வெடித்து தீப்பிடித்தது. தகவல் அறிந்த உக்கடம் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். தீ விபத்தில் கார் இரண்டாக உடைந்து உருக்குலைந்தது. போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், காரில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு சிலிண்டர்கள் இருந்ததும், அதில் ஒரு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதும், உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) என்பதும் தெரியவந்தது.
மேலும், கார் உருக்குலைந்து கிடந்ததையும், பயங்கர சத்தம் வந்ததையும் வைத்து பார்க்கும் போது, காரில் வெடிமருந்துகளும் இருந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் போலீஸாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மோப்ப நாய்களை வைத்து சோதனை செய்தனர். தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு இருந்த தடயங்களை சேகரித்தனர். காரின் உடைந்த பாகங்கள், ஆணிகள்,பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்டவற்றை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் உயிரிழப்பு, வெடிப்பொருள் தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். மேலும், உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து பல கிலோ நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

சிசிடிவி கேமரா ஆய்வு: இதற்கிடையே, ஜமேஷா முபின் வீட்டருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் சம்பவத்துக்கு முதல் நாள் இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் உள்ளிட்ட 5 பேர் வீட்டில் இருந்து ஒரு பெரிய மூட்டையை தூக்கிச் சென்று காரில் ஏற்றும் காட்சி பதிவாகியிருந்தது. இது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மூட்டையில் வெடிமருந்துகள் இருந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதை காரில் எடுத்துச் சென்று வேறு எங்காவது பதுக்கி வைத்துள்ளனரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஜமேஷா முபினுடன் கடந்த சில ஆண்டுகளாக தொடர்பில் இருந்த நபர்கள், அவரது செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவற்றை போலீஸார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரை நேற்று முன்தினம் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதன் இறுதியில் உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ்(27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) ஆகியோரை போலீஸார் நேற்று இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மூட்டையில் என்ன இருந்தது, காரில் சிலிண்டருடன் வெடி மருந்துகள் இருந்ததா, காரில் எவ்வாறு விபத்து ஏற்பட்டது, காரை எடுத்துச் செல்லும் போது கோயில் அருகே எதேச்சையாக வெடித்தா அல்லது திட்டமிட்டு வெடிக்க வைக்கப்பட்டதா என்பது போன்ற தகவல்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.