ஒருபக்கம் காந்தி..மறுபக்கம் கடவுள்!: ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படம் அச்சிடலாம்.. பொருளாதார பிரச்சனைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வினோத தீர்வு..!!

டெல்லி: ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் பிள்ளையார் மற்றும் லட்சுமி படங்களை அச்சிட வேண்டும் என பிரதமருக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்கள் இருந்தால் பொருளாதாரம் மேம்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

நாம் என்ன முயற்சி மேற்கொண்டாலும், கடவுளின் கருணை இல்லாவிட்டால் பெரியளவில் பலன் கிடைக்காது என்ற அவர், ரூபாய் நோட்டுகளில் ஒருபக்கம் காந்தியும், மறுபக்கம் லட்சுமி, விநாயகர் படங்களையும் அச்சிட வேண்டும் என்றார். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 85 விழுக்காடு இஸ்லாமியர்கள் வசிக்கும் இந்தோனேஷியாவில், கரன்சி நோட்டுகளில் விநாயகர் படம் இருப்பதாக தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், அவர்களால் முடியும் போது நம்மால் ஏன் முடியாது? என கேள்வி எழுப்பினார்.

மதச்சார்பற்ற நாட்டில் பொருளாதார பிரச்சனைக்கு மூடநம்பிக்கைகளை ஆதரிக்கும் விதமாக அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்திருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே குஜராத்தில் உள்ள ஆம் ஆத்மீ கட்சி தலைவர்கள், தொடர்ந்து இந்து மத கடவுள்களை அவமதித்து வருவதாகவும், தேர்தலை முன்னிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் இதுபோன்ற யுக்திகளை கையாள்வதாகவும் பாரதிய  ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.