கேரளாவில் உச்சக்கட்ட மோதல் நிதியமைச்சரை நீக்குங்க – கவர்னர் அவரை நீக்க முடியாது – முதல்வர்: மாறி மாறி கடிதங்கள் அனுப்புவதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: தன்னை தரக்குறைவாக தன்னை விமர்சிப்பதால் கேரள நிதியமைச்சர் பாலகோபாலை உடனடியாக பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வர் பினராய் விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகம்மது கான் கடிதம் கொடுத்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே சமீப காலமாக கடும் பனிப்போர் நிலவி வருகிறது. சமீபத்தில் அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜஸ்ரீ, யுஜிசி நிபந்தனைகளை மீறி நியமிக்கப்பட்டதாக கூறி சமீபத்தில் அவரை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து துணைவேந்தர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை பரிசீலித்த  உயர்நீதிமன்றம், கவர்னர் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தது. இந்நிலையில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு 5 பக்க கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், ‘நிதியமைச்சர் பாலகோபால் என்னுடைய விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டு வருகிறார். என்னை தரக்குறைவாக விமர்சிப்பதோடு மட்டுமில்லாமல், நாட்டையும் அவமானப்படுத்தும் நடவடிக்கைகளில்  ஈடுபடுகிறார்.

அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் முதல்வர் பினராய் விஜயன், கவர்னரின் கோரிக்கையை உடனடியாக நிராகரித்து விட்டார். இது தொடர்பாக அவர் கவர்னருக்கு உடனடியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அமைச்சர் பாலகோபால் கவர்னரை அவமானப்படுத்தும் வகையில் எதுவும் பேசவில்லை. அவரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று  முதல்வருக்கு கவர்னர் கடிதம் அனுப்பியதும், அதை உடனடியாக நிராகரித்து முதல்வர் பதில் கடிதம் அனுப்பி உள்ளது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* அமைச்சர் பேசியது என்ன?             
நிதியமைச்சர் பாலகோபால் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு கேரளாவின் அருமை தெரியாது என்று கவர்னரை மறைமுகமாக அவர் தாக்கிப் பேசினார்.

* கவர்னருக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு
கவர்னரின் நடவடிக்கைக்கு சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் கூறியுள்ளார். சிபிஐ கேரள மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன் கூறுகையில், ‘தபால் அலுவலகம் இருப்பதால் யார் வேண்டுமானாலும் யாருக்கும் கடிதம் அனுப்பலாம். தன்னுடைய அதிகாரம் என்ன என்பது குறித்து இன்னும் கவர்னருக்கு புரியவில்லை. அவர் அரசியலமைப்பு சட்டத்திற்கு சவால் விடும் வகையில் நடந்து கொள்கிறார்’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.