பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் மூதாட்டி உட்பட 3 பேருக்கு தலா 31 ஆண்டுகள் சிறை: புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை: பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூதாட்டி உட்பட 3 பேருக்கு தலா 31 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் அன்புக்கோவில் அருகே இடையன் கொள்ளைப்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்(56), அண்ணாத்துரை(41). இவர்கள் 2021 மார்ச் 3ம்தேதி 24வயதான மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கடத்தி வந்து அதே ஊரை சேர்ந்த வீரையா மனைவி அஞ்சலை (60) வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுதொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து ராஜேந்திரன், அண்ணாதுரை, அஞ்சலை ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை நீதிபதி சத்யா விசாரித்து, பாலியல் பலாத்காரம் செய்த ராஜேந்திரன், அண்ணாதுரை மற்றும் உடந்தையாக இருந்த அஞ்சலை ஆகிய 3பேருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும், பெண்ணை கடத்திய குற்றத்துக்காக தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும், பெண்ணை வீட்டுக்குள் அடைத்து வைத்த குற்றத்துக்காக 3 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், இந்த தண்டனைகளை தனித்தனியே அனுபவிக்க வேண்டும். இந்த 3 பேரின் அபராத தொகை ரூ.6.03 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்க வேண்டும் எனவும் நேற்று தீர்ப்பளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.