உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சரொருவர், பிரதமர் நரேந்திர மோடியை, கடவுளின் அவதாரம் என்றும், அவர் விரும்பினால் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பிரதமராக இருக்கலாம் என்றும் கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

நேற்று ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச அமைச்சர் குலாப் தேவி, “பிரதமர் மோடி, கடவுளின் அவதாரத்தைப் போன்றவர். அதுமட்டுமல்லாமல், அவர் ஒரு அசாதாரணமான திறமை கொண்டவர். அவருடன் யாருமே போட்டியிட முடியாது. மேலும் அவர் விரும்பினால், தன்னுடைய வாழ்நாள் முழுவதுமே பிரதமராக இருக்கலாம்” எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து குலாப் தேவியிடம், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைப் பிரதமராக்க வேண்டும் என சில எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுவது பற்றி கேள்வி முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு, “வெறும் யூகங்களால் இங்கு எதுவும் நடக்காது. மோடியை, கடவுள் தன்னுடைய பிரதிநிதியாக அனுப்பிவைத்திருக்கிறார். இந்த முழு நாடும் அவரின் வார்த்தைகளைப் பின்பற்றுகிறது. இதைவிடப் பெரிய அங்கீகாரம் என்ன இருக்க முடியும்” என்று குலாப் தேவி பதிலளித்தார்.