கோவை: கோவையில் கார் வெடித்த வழக்கில் கைதான 5 பேரிடம் 3வது நாளாக போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சிலரது வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி மாருதி கார் வெடித்து வாலிபர் ஒருவர் பலியானார். காரில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து விபத்து நடந்ததாக கூறப்பட்டது. இந்த விபத்தில் சதிதிட்டம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவின் பேரில், கோவை மாநகர போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
மேலும் டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் கோவையில் முகாமிட்டு சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டனர். மேலும் தடயவியல் துறை அதிகாரிகள் காரில் இருந்த தடயங்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கார் வெடிப்பில் பலியானது கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (29), பழைய துணி வியாபாரி என்பது தெரியவந்தது. மேலும் காரில் இரும்பு ஆணிகள், கோலி குண்டுகள் சிதறி கிடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்திய போது அங்கே வெடி பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இருந்தன. கார் வெடிப்பதற்கு முந்தைய இரவில் சிலர் காரில் வெடி பொருட்களை ஏற்றுவது போல் வெளியான சிசிடிவி காட்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கோவை மாநகரின் முக்கிய இடங்களில் குண்டு வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த முகமது தல்கர் (25), முகமது அசாருதீன்(25), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில் (28), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (உபா) பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இவர்களை கடந்த 26ம் தேதி முதல் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று 6வதாக வின்சென்ட் ரோட்டை சேர்ந்த அப்சர்கான் என்பவர் உபா சட்டத்தில் செய்யப்பட்டார். கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினின் சகோதரர் முறை உறவினரான அப்சர்கான் எலக்ட்ரீசியன் வேலை பார்த்துள்ளார். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலம் வெடிகுண்டு தயார் செய்வதற்கான ரசாயன பொருட்களை கொள்முதல் செய்துள்ளார்.
இதற்கான திட்டத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி செயல்படுத்தி வந்துள்ளார். மொத்தமாக வாங்கினால் சந்தேகம் ஏற்படும் என்பதால் வெவ்வேறு நபர்கள் வாயிலாக சிறிது சிறிதாக வாங்கி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே காவல் விசாரணையில் 5 பேரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போலீசார் ஆன்லைன் தளங்களில் குறிப்பிட்ட இந்த ரசாயன பொருட்களை வாங்கிய நபர்களின் பட்டியலை சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே தமிழக அரசு பரிந்துரையின் பேரில், கார் வெடித்த வழக்கை என்ஐஏவுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றி ஒன்றிய உள்துறை செயலகம் உத்தரவிட்டது.
இதனையடுத்து இவ்வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை கோவை மாநகர போலீசார், என்ஐஏ டிஐஜி வந்தனா, எஸ்பி ஜித் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைதானவர்களிடம் நடத்தப்பட்டு வரும் காவல் விசாரணையின் முடிவில் என்ஐஏ அதிகாரிகளின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் எனவும், அதன்பேரில், சிலரது வீடுகளில் சோதனை நடத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சிறை சந்திப்பின் பின்னணி என்ன?
கோவை கார் வெடித்த வழக்கில் கைதான 5 பேரிடமும் போலீசார் 3வது நாளாக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் துருவி, துருவி விசாரித்து வருகின்றனர். மேலும் வெடிபொருட்கள் தயாரித்தது எப்படி, அதற்கு திட்டம் தீட்டியது யார்?, இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் யார்?, என கேள்விகளை கேட்டு வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர். கோவையில் கடந்த 2019ம் ஆண்டு என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி சிலரை கைது செய்தனர். அவர்கள் கேரள சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை கோவையில் தற்போது கைதான 5 பேரில் சிலர் அடிக்கடி கேரள சிறைக்கு சென்று சந்தித்து வந்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது அவர்கள் சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கு ஆலோசனை பெறவே அவர்கள் சிறைக்கு சென்று சந்தித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.