காந்தாரா இயக்குநருடன் சந்திப்பு… சிலாகித்து பேசிய ரஜினி

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காந்தாரா. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்னையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக காந்தாரா வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிஷோர், சப்தமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பை அடுத்து படத்தை  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட போவதாக படக்குழு அறிவித்திருந்தது. 

அதன்படி காந்தாரா தமிழில் டப் செய்யப்பட்டும் சமீபத்தில் வெளியானது. படத்தை பார்த்த தமிழ் ரசிகர்களும் மிகப்பெரிய வரவேற்பை படத்துக்கு கொடுத்துள்ளனர். குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பிரமிப்பாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டும்வருகின்றனர். மேலும், நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து எழுதியிருக்கும் திரைக்கதையையும் பலர் பாராட்டிவருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் ரிஷப் ஷெட்டி சந்தித்து பேசி ஆசி பெற்றுக்கொண்டார். நீண்ட நேரம் ரிஷப்புடன் உரையாடிய ரஜினிகாந்த் இந்தியாவின் மிகச்சிறந்த படம் காந்தாரா என்று புகழ்ந்தார். 

முன்னதாக, இந்திய சினிமாவில் அதிக ஐஎம்டிபி ரேட்டிங்கில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் இருந்தது. அதாவது, ஐஎம்டிபியில் ‘ஜெய்பீம்’ படத்தின் ரேட்டிங் 8.9. இந்திய சினிமாவில் அதிக ஐஎம்டிபி ரேட்டிங் பெற்ற படமாக அந்தப் படம் கருதப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் 8.4 ரேட்டிங்குடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. 

அடுத்ததாக ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ 8 ரேட்டிங்கில் இருந்தது. ஆனால், இவை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி 9.5 ஐஎம்டிபி ரேட்டிங்குடன் முதலிடம் பிடித்துள்ளது காந்தாரா திரைப்படம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.