சேலத்தில் எஸ்.எம்.எஸ் மூலம் வாலிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி – எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸார்

சேலம், கெங்கவல்லி அருகேயுள்ள மண்மலைபழக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரின் மகன் முத்துக்குமார். இவரின் செல்போனுக்கு கடந்த ஜூலை மாதம் எட்டாம் தேதி ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில், `அதிகம் பணம் சம்பாதிக்க பகுதி நேர வேலை உள்ளது. வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும்’ என ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண் இருந்தது. இதை நம்பி முத்துக்குமார் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உள்ளார்.

அப்போது, `தாங்கள் செலுத்துகிற முதலீட்டு தொகைக்கு அவ்வப்போது அதிக கமிஷன் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளனர். இதை நம்பிய முத்துக்குமார் முதலில் 200 ரூபாய் பிறகு 100 ரூபாய் அவர்கள் குறிப்பிட்ட வெப்சைட்டில் சென்று செலுத்தியுள்ளார். அதற்கு முதற்கட்டமாக ரூபாய் 456 கமிஷன் கிடைத்துள்ளது. உடனே அடுத்தடுத்து தன்னிடம் இருந்த பணம், பெற்றோரிடம் வாங்கிய பணம் என 608 பரிவர்த்தனைகளில் ரூ.15 லட்சம் வரை செலுத்தியுள்ளார்.

சித்திரிப்புப் படம்

ஆனால் அந்தப் பணமும் அதற்கான கமிஷனும் முத்துக்குமாரின் கணக்கிற்கு திரும்ப வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் வங்கிக்கு சென்று கேட்டுள்ளார். அங்கு அதிகாரிகள் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து சேலம் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் முத்துக்குமார் புகார் கொடுத்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸாருக்கு, முத்துக்குமாரிடம் பகுதிநேர வேலை என ஆசை வார்த்தை கூறி மெசேஜ் அனுப்பி ஆன்லைன் மூலம் மோசடி செய்தது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோசடி கும்பல் என தெரியவந்துள்ளது.

மேலும் இது போன்ற மோசடி கும்பல் செல்போனுக்கு தேவையில்லாத மெசேஜ்கள் மற்றும் அழைப்புகள் விடுத்தால் யாரும் பதில் அளிக்க வேண்டாம். அதேபோல் வாட்ஸ்அப்பில் தெரிவிக்கப்படும் செயலிகளை பதிவிறக்கம் செய்து உள்ளீடு செய்திட வேண்டாம் என சைபர் க்ரைம் போலீஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.