"இனி வாழ்வை அனுபவிக்கவேண்டும்" – பாலியல் வழக்கில் 38 ஆண்டுகளுக்குப் பின் நிரபராதியாக விடுதலையான நபர்

அமெரிக்காவில், 1983-ம் ஆண்டு ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த வழக்கில் சிறைக்குச் சென்ற நபர் ஒருவர், 38 ஆண்டுக்கால சிறைவாசத்துக்குப் பின்னர் டி.என்.ஏ சோதனை மூலம் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 69 வயதுடையவராக அறியப்படும் மாரிஸ் ஹேஸ்டிங்ஸ் (Maurice Hastings) எனும் இந்த நபர், 20 ஆண்டுகளுக்கு மேலாக டி.என்.ஏ சோதனை மேற்கொள்ளுமாறு தன்னுடைய வழக்கறிஞர்கள் மூலம் போராடிவந்திருக்கிறார்.

சிறை

இந்த சிறைவாச காலத்தின்போது இடையில், மாரிஸ் ஹேஸ்டிங்ஸை குற்றவாளி என தூக்கிலிடவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அது நிகழவில்லை. அதைத் தொடர்ந்து, 2000-ம் ஆண்டில், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ சோதனை மேற்கொள்ளவேண்டும் என கோரிய மாரிஸ் ஹேஸ்டிங்ஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், பிணைக்கப்பட்ட நடுவர் மன்றத்தின் முடிவு(tied jury decision) காரணமாக ஒரு புதிய விசாரணை நடத்தப்பட்டபிறகு, இந்த வழக்கில் வேறொருவர் குற்றவாளி என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதையடுத்து, கடந்த அக்டோபர் 20-ம் தேதியன்று மாரிஸ் ஹேஸ்டிங்ஸின் தண்டனை ரத்து செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.

வழக்கிலிருந்து விடுதலை

பின்னர், தான் விடுதலையானதையடுத்து பேசிய மாரிஸ் ஹேஸ்டிங்ஸ், “இந்த நாள் வர வேண்டும் என்றுதான் பல ஆண்டுகளாக நான் பிரார்த்தனை செய்தேன். இனி முன்னோக்கிச் செல்வதை மட்டுமே நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். மேலும் இங்கு நான் யாரையும் குறை கூறவில்லை. நான் செய்ய விரும்புவது எல்லாம், இப்போது என் வாழ்க்கையை நான் அனுபவிக்க வேண்டும் என்பதுதான்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.