தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி

அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறும் வகையில் அனுமதி மறுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 6ம் தேதி அணிவகுப்புக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நீதிபதி இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரியபோது இருந்த சூழல் வேறு, தற்போதைய  சூழல் வேறு என்பதால்,  கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மீதமுள்ள 47 இடங்களில் 24 இடங்களுக்கு அனுமதி வழங்க இயலாது, 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்த அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநிலத்தின் பாதுக்காப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என ஆர்.எஸ்.எஸ். தரப்பை கேட்டுக் கொண்டது. காவல் துறையின் இந்த விளக்கத்துக்கு ஆட்சேபம் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். தரப்பு,  உளவுத்துறை அறிக்கையை காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்ப்பதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளதாகவும், அணிவகுப்பை உள்ளரங்க கூட்டமாக நடத்த முடியாது எனவும் வாதிடப்பட்டது. 

அமைதியாக  ஊர்வலம் நடத்தும் ஜனநாயக உரிமையை யாரும் பறிக்க முடியாது, தமிழகம் அமைதி பூங்கா என சொல்லிவிட்டு, அணிவகுப்புக்கு அனுமதி கேட்டால்  சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்கிறார்கள் என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. கோவையை தவிர மற்ற இடங்களில் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கலாமே என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளுக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.  இதையடுத்து, உளவுத்துறை அறிக்கையை ஆய்வு செய்த பிறகு ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டுமா? வேண்டாமா ?என்பது குறித்த உத்தரவை பிறப்பிப்பதாகக் கூறி,  விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.