சென்னை: சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக செயின்மற்றும் செல்போன் பறிப்பு கொள்ளையர்களுக்கு எதிராக நேற்று முன்தினம் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு தணிக்கையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, வீடு புகுந்து திருடுதல் போன்ற வழக்குகளில் தொடர்புடைய 562 பேர் தணிக்கை செய்யப்பட்டனர். அவர்களில் 15 பேரிடம் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த 17 குற்றவாளிகள் பிடிபட்டனர்.
அதுமட்டுமின்றி, பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 480 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும், 45 குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதி மொழி பிணை பத்திரம் பெற குற்ற விசாரணை முறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தலைமறைவாக உள்ள கொள்ளையர்கள், குற்றவாளிகளை கைது செய்ய அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகரில் பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.