சென்னை, கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணாபுரம், தாங்கல்கரை தெருவைச் சேர்ந்த ராஜா என்கிற சீசிங் ராஜா (48) . சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு (‘A+’ பிரிவு) குற்றவாளியாவார். இவர் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து தென்சென்னை, புறநகர் மற்றும் பிற பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. ஏற்கெனவே சீசிங் ராஜா மீது சென்னை, ஆந்திரா காவல் நிலையங்களில் 5 கொலை வழக்குகளும், 5 கொலை முயற்சி வழக்குகளும், ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில், கடந்த 19.07.2022 தேதி சீசிங் ராஜா, தன்னுடைய கூட்டாளிகளான சேலத்தைச் சேர்ந்த பிரபு, மீனாட்சி, செல்லப்பா, தேவா, ரமேஷ், கிறிஸ்டோபர் வில்லிவாக்கம், சந்தோஷ் ஆகியோருடன் சேர்ந்து வேளச்சேரியில் உள்ள ஒருவரையும் அவரின் மருமகளையும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து அவர்கள் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதில், `தங்களுக்குச் சொந்தமாக சேலம் மாவட்டம் கோவிலூரில் உள்ள 22.5 ஏக்கர் இடத்தை பதிவு செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களைக் கொலை செய்து விடுவோம்’ என மிரட்டியதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதுதொடர்பாக வேளச்சேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரௌடி சீசிங் ராஜா அவரின் கூட்டாளிகளைத் தேடிவந்தனர். இந்த வழக்கில் கிறிஸ்டோபர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். தலைமறைவாக இருந்த ராஜா (எ) சீசிங் ராஜாவை ஆந்திர மாநில எல்லையில் வைத்து தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்காவின் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கைதான சீசிங் ராஜா 7 தடவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர். ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்தவர் அதன்பிறகு தலைமறைவாகி விட்டார். தலைமறைவாக இருக்கும் காலக்கட்டத்திலும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை கடந்த 2021-ம் ஆண்டு முதல் காவல்துறையினர் தேடிவருகிறார்கள். இந்தநிலையில் அவரைக் கைது செய்திருக்கிறோம். அவரிடமிருந்து உரிமம் பெறாத ரிவால்வர்-1, 14 தோட்டாக்கள், ஏழு செல்போன்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து சீசிங் ராஜாவிடம் விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. விசாரணைக்குப்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளோம்” என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். “வேளச்சேரி வழக்கு தொடர்பாக சீசிங் ராஜவைப் பிடிக்க சென்னைப் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்து. அவரின் செல்போன் சிக்னல் மற்றும் எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சீசிங் ராஜாவைக் கைது செய்துவிட்டோம். அவரை சென்னைக்கு அழைத்து வரும் வழியில் தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீஸார் துப்பாக்கி முனையில் அவரை மடக்கிப் பிடித்து விட்டனர். அப்போது அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் எப்போதும் சீசிங் ராஜாவிடம் துப்பாக்கி இருக்கும். அதனால் முன்எச்சரிக்கையுடன் செயல்பட்டு சீசிங் ராஜாவைப் பிடித்தோம். சீசிங் ராஜாவுக்கு சென்னை புறநகர் பகுதிகளில்தான் அதிகளவில் வழக்குகள் உள்ளன” என்றார்.