வாழ்க்கையில் 34 முறை ஓட்டு போட்டவர் நாட்டின் முதல் வாக்காளர் மரணம்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்

சிம்லா: இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி நேற்று காலமானர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, இமாச்சல் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இமாச்சலப் பிரதேசம் மாநிலம், கின்னூரை சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி (106). இவர் இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமைக்குரியவர். இதுவரை 34 முறை தபால் வாக்கு மூலம் வாக்காளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் விளம்பர பிரதிநிதியாக இருந்துள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நேகி நேற்று காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இமாச்சலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, மண்டி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசுகையில், ‘​​ஷியாம் சரண் நேகியின் மரணம் குறித்து அறிந்தேன். ஜனநாயகம் குறித்த நேகியின் கண்ணோட்டம் நாட்டின் இளைஞர்களை ஊக்குவிக்கும். கனத்த இதயத்துடன் தலை வணங்கி அஞ்சலி செலுத்துகிறேன். அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இமாச்சல் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகியின் மறைவு குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். தனது கடமையை கடைபிடித்து, நவம்பர் 3ம் தேதி 34 வது முறையாக தபால் வாக்கு மூலம் வாக்களித்தார். இந்த எண்ணம் நிறைவேறும். எப்பொழுதும் என்னை உணர்ச்சிவசப்பட வைக்கும்’ என்று இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல், காங்கிரஸ், பாஜ, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள் நேகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். நேகியின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

* கடைசி காலத்திலும் ஜனநாயக கடமை
வரும் 12ம் தேதி இமாச்சலில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. உடல் நலக்குறைவு இருந்தாலும், இம்முறை தேர்தலிலும் நேகி தபால் மூலம் தனது வாக்கை கடந்த 3ம் தேதி பதிவு செய்திருந்தார். இதற்காக அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று பாராட்டினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.