இஸ்ரேலில் டெல் அவிவ் நகரிலிருந்து பாங்காக்குக்கு விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணி ஒருவர் கழிவறைக்கு சென்று சிகரெட்டை பற்ற வைத்துள்ளார்.
அப்போது திடீரென அலாரம் அடித்ததால் பதறிப்போன பயணி சிகரெட்டை அணைக்காமல் குப்பை தொட்டியில் போட்டுவிட்டு கழிவறையில் இருந்து வெளியேறினார்.
குப்பை தொட்டியில் போடப்பட்ட சிகரெட்டால் அங்கிருந்த டிஸ்யூ பேப்பர்களில் தீ பற்றிக்கொள்ள அலாரம் தொடர்ந்து அலறியது. இதனையடுத்து விமான ஊழியர்கள் உடனடியாக கழிவறைக்குச் சென்று, எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமானம் பாங்காக்கில் தரையிறங்கிய நிலையில், சிகரெட் பற்ற வைத்த பயணியை விமான நிலைய போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
அந்த பயணி தாய்லாந்திலிருந்து இஸ்ரேல் திரும்பியவுடன் சட்டரீதியான பிரச்னையை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது. 1972ஆம் ஆண்டு பயணி ஒருவர் தீயை அணைக்காமல் சிகரெட்டை குப்பைத்தொட்டியில் போட்டதால் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 123 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் விமானத்தில் புகைபிடிக்க பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.
newstm.in