ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா: 200 ஆண்டுகளாக தொடரும் வழிபாடு

வாழப்பாடி அருகே 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே வழிபடும் வனக்காவல் தெய்வமான அஞ்சாலன் குட்டை முனியப்பன் வினோத திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சியில்; 150 ஏக்கரில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியின் நடுவில் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. தற்போது இந்த வனப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு சிலர், இவ்வழியே செல்லும் பொதுமக்களை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர். மேலும் அதனை அஞ்சலான் குட்டை முனியப்பன் செய்ததாக பொதுமக்களிடம் தகவல் பரப்பியதாகவும், பின்னர் அஞ்சலான் குட்டை முனியப்பன் அவர்களை தண்டித்ததாகவும் செவி வழியாக கதை ஒன்று கூறப்பட்டு வருகிறது.
image
இதையடுத்து சிங்கிபுரம், பழனியாபுரம், வேப்பிலைப்பட்டி, வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் வனக்காவல் தெய்வமாக அஞ்சலான் குட்டை முனியப்பனை வழிபட்டு வருகின்றனர். சுமார் 200 ஆண்டுகள் பழமையான கோவிலில் ஆண்கள் மட்டுமே தொடர்ந்து பூஜை செய்து வழிபட்டு வருவதோடு, பெண்கள் யாரும் கோவிலில் சென்று வழிபடுவதில்லை.
பொங்கல் வைத்து, கிடா வெட்டி, பூஜை செய்தபின் சமையல் செய்வதற்கு கூட பெண்கள் இப்பகுதிக்கு வருவதில்லை. சமையலுக்குத் தேவையான ஏற்பாடுகளை கூட பெண்கள் தொடக்கூடாது எனவும், இது ஆண்டு ஆண்டாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
அதேபோல் கோவிலில் ஆண்கள் வழிபாடு நடத்திவிட்டு திருநீரை வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது எனவும் அவ்வாறு கொண்டு சென்று பெண்களுக்கு கொடுத்தால் பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.
image
இக்கோவிலில் நினைத்த காரியம் நிறைவேற வழிபாடு செய்யும் பொதுமக்கள், அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப சிலைகளை கொண்டு வந்து கோவில் வெளிப்புறத்தில் வைக்கின்றனர். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் வேண்டுதல் வைத்து குழந்தை வடிவில் சிலை வைத்து வணங்குகின்றனர். அவ்வாறு வைத்து வணங்குவதால் தங்களது வேண்டுதல் நிறைவேறுவதாக கூறுகின்றனர்.
கிராமத்தைக் காக்கும் வன காவல் தெய்வமாக அஞ்சலான் குட்டை முனியப்பன் திகழ்வதாகவும், ஆகவே ஆண்கள் மட்டுமே இக்கோவிலில் சாமி தரிசனம் செய்து வருவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.