புதுச்சேரி: கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு மழைநிவாரணமாக ரூ.5.5 கோடி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையில், நிதித்துறை உத்தரவு அனுப்பி 4 மாதங்களாகியும் பல கோடியை அரசு ஊழியர்களிடம் இருந்து இன்னும் திரும்ப பெறவில்லை.
சிவப்பு ரேஷன் அட்டை மூலம் அரசு ஊழியர்கள் பெற்ற மழைநிவாரணம் ரூ.5 ஆயிரத்தை 24 துறைகளில் இருந்து அதிகாரிகள் நான்கு மாதங்களாகியும் ரூ.5.5 கோடியை பிடித்தம் செய்யாததால் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநரிடம் மனு தரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் மக்களுக்கு ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3.4 லட்சத்துக்கும் அதிகமான மஞ்சள், சிவப்பு கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வசதி படைத்தபலர் சிவப்பு கார்டு வைத்திருப்பதாகவும் துறைக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக 1.7 லட்சம் சிகப்பு ரேஷன் கார்டுகளுக்கு முறையான கணக்கெடுப்பு நடத்தி களஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக்காரணம் அரசு ஊழியர்கள், வசதி படைத்த பலரும் சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பதுதான்.
அதே நேரத்தில் பழங்குடியினர், ஏழை மக்கள் பலரும் மஞ்சள் ரேஷன் அட்டைகளைதான் வைத்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் அரசு ஊழியர்கள் 11 ஆயிரம் பேர் சிவப்பு ரேஷன் அட்டைகளை வைத்துள்ளதை நிதித்துறை கண்டறிந்தது. கடந்தாண்டு மழை பொழிவின்போது சிவப்பு ரேஷன்கார்டுக்கு ரூ.5 ஆயிரம், மஞ்சள் கார்டுக்கு ரூ.4 ஆயிரத்து 500 மழை நிவாரணம் வழங்கப்பட்டது. அரசு ஊழியர்கள் விதிகளை மீறி சிகப்பு கார்டு பயன்படுத்தி மழை நிவாரணம் பெற்றதாக நிதித்துறைக்கு புகார்கள் குவிந்தன.
தலைமை செயலர் ராஜீவ்வர்மா உத்தரவின்படி விசாரணை நடத்தப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் பலர் சிகப்பு கார்டு வைத்திருப்பதும் மழை நிவாரணம் பெற்றுள்ளது தெரியவந்தது. அவர்களின் சம்பளத்தில் இருந்து சிவப்பு அட்டையை பயன்படுத்தி பெற்றத்தொகையை பிடித்தம் செய்து அரசு கஜானாவால் சேர்க்க நிதித்துறை உத்தரவிட்டது. புதுச்சேரியில் பல அரசு ஊழியர்கள் சிவப்பு ரேஷன் அட்டை மூலம் முறைகேடாக மழை நிவாரணம் ரூ.5,000/- பெற்றுள்ளதை குடிமைப்பொருள் வழங்கல் துறையினர் கண்டறிந்து அந்த தொகையை பிடித்தம் செய்து, குடிமைப்பொருள் வழங்கல் துறை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டி 24 அரசு துறைகளுக்கு 21.06.2022 அன்று ஆணை அனுப்பப்பட்டது.
இதில் பொதுப்பணித்துறையில் மட்டும் 92 ஊழியர்களிடம் 4,60,000/- ரூபாய் பிடித்தம் செய்து 10.07.2022-க்குள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டி பொதுப்பணித்துறையின் துறை உயர் அதிகாரி, அனைத்து பிரிவுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். இதையடுத்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, இதுபோல் எத்தனை துறைகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டது. எந்தெந்த துறைகளில் எவ்வளவு தொகை பிடித்தம் செய்து வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது போன்ற விபரங்களை குடிமைப் பொருள் வழங்கல் துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்களாக கேட்டார்.
அதில் கிடைத்த தகவல்களை ஆளுநர், தலைமைச்செயலரிடம் மனுவாக தந்துள்ளார். அதன் விவரம்: ரூ.5000 தொகையை திரும்பப் பெற 24 அரசு துறைகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டது. ஆனால் 3 துறைகளில் துறைக்கு ஒரு ஊழியர் என 15,000/- ரூபாய் மட்டுமே குடிமைப்பொருள் வழங்கல் துறை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. நிதித்துறை உத்தரவு அனுப்பி 4 மாதங்களாகியும் பல கோடியை அரசு ஊழியர்களிடம் இருந்து திரும்பப் பெறவில்லை.
இது செயல்பாடின்மையை காட்டுவதுடன், அதிகாரிகளும் இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக உள்ளார்களோ என்று தோன்றுகிறது. அதனால் அரசுக்கு திரும்ப வேண்டிய பல கோடியை பிடித்தம் செய்ய நான்கு மாதங்களாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உடன் நடவடிக்கை எடுப்பதுடன், இத்தொகையை பிடித்தம் செய்யவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.