புதுடெல்லி: பாஜக ஆளும் உ.பி.யில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் என குடிமைப்பணி அதிகாரிகளாக சுமார் 40 தமிழர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கியப் பதவிகளில் அமர்த்தியுள்ளார்.
இதில் பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் மாவட்ட ஆட்சியராக தமிழரான எஸ்.ராஜலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்தவர். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (தற்போதைய என்ஐடி) வேதிப்பொறியியலில் பட்டம் பெற்றவர். மிகவும் திறமையான அதிகாரியாகக் கருதப்படும் இவர், தான் பணியாற்றிய மாவட்டங்களில் முத்திரை பதித்துள்ளார்.
தற்போது குஷிநகர் ஆட்சியராக உள்ள ராஜலிங்கம், அம்மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை விரைவாக நிறைவேற்றி இருந்தார். இதற்காக அவரை, சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, தோளில் தட்டிப் பாராட்டியது பெரிதும் பேசப்பட்டது.
குஷிநகருக்கு முன், சுல்தான்பூர் ஆட்சியராக ராஜலிங்கம் இருந்தபோது, நடைபாதைகளில் 50 ஆண்டுகளாக எந்த அடையாளம் இன்றி வாழ்ந்த 18 குடும்பங்களுக்கு அவர் செய்த உதவியும் பெரிதாக நினைவுகூரப்படுகிறது.
கோரைப்புல்லில் தார் பாய் மற்றும் மூங்கில் பொருட்களை தயாரித்து விற்று பிழைத்த குடும்பங்களுக்கு இவர் மறுவாழ்வு அளித்தார். ஆதார், ரேஷன் அட்டைகள், குழந்தைகளுக்கு கல்வி என அனைத்தும் அளித்து நிரந்தரமாகக் குடியமர்த்தினார்.
2006-ல் முதல்முறையாக குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெற்ற ராஜலிங்கம் உ.பி.யின் ஐபிஎஸ் அதிகாரி ஆனார். தொடர்ந்து படித்து 2009-ல் அதே உ.பி.யின் ஐஏஎஸ் அதிகாரி ஆனார். பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் நவ. 17 முதல் ஒருமாதத்திற்கு ‘தமிழ் சங்கமம்’ நடைபெறுகிறது. இச்சூழலில் தமிழரான ராஜலிங்கம் அம்மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உ.பி.யின் சைபர் கிரைம் டிஐஜியாக தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் என்.கொளஞ்சி பணியாற்றி வருகிறார். மாவட்ட எஸ்எஸ்பி.க்களாக அமேதியில் மன்னார்குடியை சேர்ந்த ஜி.இளமாறனும், ஜான்சியில் சு.ராஜேஷும் பணியில் உள்ளனர். சென்னையின் என்.சாமுவேல் பால், அம்பேத்கர் மாவட்ட ஆட்சியராக உள்ளார். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான தமிழர்களில் மின்துறை செயலாளராக தேவராஜ், ஆயத்தீர்வை ஆணையராக சி.செந்தில் பாண்டியன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். உ.பி. மருந்து சேவை ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக கரூரைச் சேர்ந்த பி.முத்துக்குமாரசாமி பணியாற்றுகிறார்.
டெல்லி அருகில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் காஜியாபாத்தில் எஸ்எஸ்பி.யாக தருமபுரியைச் சேர்ந்த ஜி.முனிராஜ் பணிபுரிகிறார். இவர், என்கவுன்ட்டர் மற்றும் அதிரடி நடவடிக்கைகளுக்காக ‘உபி சிங்கம்’ என அழைக்கப்பட்டவர் ஆவார்.