சென்னை: “உயர் சாதி ஏழைகளுக்கு அளிக்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, சமூக நீதிப் போராட்டத்தில் நெடிய களங்களை சந்திக்க வேண்டியதை உணர்த்துகிறது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது.
சமூக நீதிக் கோட்பாட்டையே தகர்க்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றிய இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் மொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக் கூடாது என்று வரையறுத்துள்ளது. ஆனால், பாஜக அரசு அரசியல் சாசனத்தின் சமூக நீதிக் கோட்பாட்டிற்கு எதிராக இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணித்தது சமூக நீதியையே நீர்த்துப் போகச் செய்கிற நடவடிக்கையாகும்.
உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த முக்கியமான வழக்கில்தான் இன்று உச்ச நீதிமன்றம் உயர் சாதி ஏழைகளுக்கு அளிக்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அமர்வில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜெ.பி.பார்திவாலா ஆகியோர் 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்றும், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திரபட் ஆகிய இருவரும் செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
மண்டல் குழு வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லது என்று தீர்ப்பளித்தது. அதை முறியடிப்பதற்குத்தான் ஒன்றிய பாஜக அரசு, அரசமைப்புச் சட்டத்தில் 103ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து, உயர் சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தது. ஒட்டுமொத்தமாக சமூக நீதி தத்துவத்தையே கேலிக்குள்ளாக்கும் வகையில், பாஜக அரசு நிறைவேற்றிய 103ஆவது சட்டத் திருத்தம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை (Basic Structure) தகர்த்திருக்கிறது.
இதனை உச்ச நீதிமன்றம் பெரும்பான்மை தீர்ப்பு அடிப்படையில் செல்லும் என்று கூறி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. சமூக நீதிப் போராட்டத்தில் நீண்ட நெடிய களங்களை சந்திக்க வேண்டிய நிலைமையை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.சமூக நீதிக்காகப் போராடும் ஜனநாயக சக்திகள் ஒன்றுசேர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று வைகோ கூறியுள்ளார்.