உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை பதவியேற்பு!

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை பதவியேற்க உள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் 49 ஆவது தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய அலுவல் பணிகள் நேற்றுடன் முடித்து வைக்கப்பட்டன. இதை அடுத்து, புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் 9 ஆம் தேதி நாளை (புதன் கிழமை) பதவியேற்க உள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதன் மூலம் நாட்டின் 50 ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்பார்.

இந்த பதவியேற்பு விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 1998 ஆம் ஆண்டு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016 ஆம் ஆண்டு உசச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உச்ச நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி.ஒய்.சந்திரசூட் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை தலைமை நீதிபதியாக நீடிப்பார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.