குஜராத்தில் ஓவைசி சென்ற வந்தே பாரத் மீது கல்வீச்சு: போலீஸ் மறுப்பு

சூரத்: குஜராத்தில் தான் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஓவைசி கூறியுள்ள குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர். குஜராத்தில் அடுத்த மாதம் 1, 5ம் தேதிகளில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது, இங்கு நடக்கும் தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொள்வதற்காக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்பி.யுமான அசாதுதீன் ஓவைசி, வந்தே பாரத் ரயிலில் சூரத்துக்கு சென்று கொண்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்துள்ளதாக அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

இது குறித்து மேற்கு ரயில்வேயின் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் பர்மர் கூறுகையில், ‘கல்வீசு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. சம்பவம் நடந்ததாக கூறப்படும் பருச் மாவட்டத்தில் உள்ள அங்க்லேஷ்வர் அருகே தண்டவாளத்தில் சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்ததால் ரயில் சென்ற வேகத்தில் அங்கிருந்த கற்கள் சிதறி வந்து ரயில் மீது பட்டிருக்க கூடும். இது குறித்து விசாரணை நடைபெற்ற வருகிறது’ என்று கூறினார்.  

ஓவைசி கட்சியின் செய்தி தொடர்பாளர் வாரிஸ் பதான் பேரணியில் பேசுகையில், ‘ஓவைசியுடன் நானும், சபீர் கப்லிவாலாவும் தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொள்வதற்காக அகமதாபாத்தில் இருந்து சூரத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில்  பயணித்தபோது அடையாளம் தெரியாத சிலர் ரயில் மீது கற்களை வீசி, அதன் கண்ணாடியை  உடைத்தனர். அப்போது, ஓவைசி ஜன்னால் ஓரம் அமர்ந்திருந்தார். இதற்கான புகைப்படம் என்னிடம் உள்ளது,’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.