முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் வெளிநாட்டவர்கள் என்ற அடிப்படையில் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு முகாமிற்கு வருகை தந்த நளினி, கிட்டத்தட்ட 6 மணி நேரம் அவருடைய கணவர் முருகன் உட்பட நால்வரையும் சந்தித்துப் பேசினார்.

சிறப்பு முகாமிலிருந்து வெளியே வந்த நளினி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீங்கள் கேள்விப்பட்டதைப் போல முகாமினுள் அவர்கள் (முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்) உண்ணாவிரதம் எல்லாம் இருக்கவில்லை. முகாமினுள் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்திருக்கின்றனர். ’நீங்கள் விருப்பப்படும் நாட்டிற்குச் செல்வதற்கு தேவையான முன்னெடுப்பை எடுக்கிறோம்’ எனச் சொல்லிப் பேசி அவர்களை ஆறுதல்படுத்தியிருக்கிறோம். நால்வரையும் அவர்கள் விருப்பப்படும் நாட்டிற்கு கூடிய சீக்கிரம் அனுப்ப வேண்டுமென மத்திய அரசையும், தமிழக அரசையும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
கலெக்டரிடமும் (திருச்சி கலெக்டர் பிரதீப்குமார்) இதுகுறித்தான கோரிக்கையை இன்று வைத்துள்ளேன். அவர் `எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுங்கள்’ எனச் சொல்லியிருக்கிறார். என்னுடைய மகள் லண்டனில் இருப்பதால், என்னுடைய கணவர் லண்டன் செல்ல விருப்பப்படுகிறார். நானும் என் மகளைப் பார்த்து 16 வருடங்கள் ஆகின்றன. எனவே, நானும் என்னுடைய கணவரும் எங்கள் மகளுடன் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். சாந்தன் இலங்கைக்குச் செல்ல வேண்டுமென விரும்புகிறார். மற்ற இருவரும் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. விசா, எம்பஸி விவகாரங்களால் இன்னும் இரு வாரங்களுக்குள் நால்வரும் சிறப்பு முகாமிலிருந்து வெளியே வர வாய்ப்பிருக்கிறது. 32 வருஷமாக ஜெயில்ல இருந்துட்டு இப்ப முகாம்ல வச்சிருக்கறதும் ஜெயில் மாதிரி தானே… பாவமில்லையா… 3-4 கதவை போட்டு அடைச்சி வச்சிருக்காங்க. பார்க்கவே சங்கடமாக இருக்கு” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “நான் ஒரு காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவள். எங்க அம்மாவுக்கு காந்திதான் பெயர் வச்சாரு. இந்திரா காந்தி அம்மா இறந்தப்ப எங்க வீட்ல சாப்பாடே செய்யலை. நாலு நாள் அழுதுக்கிட்டே இருந்தோம். அப்படியிருக்க அவங்க வீட்டுல ஒரு குற்றத்துல நான் ஈடுபட்டேன்னு என் பேர்ல பெரிய குற்றம் இருக்கு. இது சரியானால்தான் என் மனசுக்கு நிம்மதி கிடைக்கும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யாரென்று எனக்குத் தெரியாது” என்றார்.