புதுச்சேரி: “மாணவிகளிடம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அத்துமீறலால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதில், இச்சம்பவத்தை மூடிமறைக்க முயன்ற கல்வித் துறை அதிகாரிகள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று புதுச்சேரியில் ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து புதுவை மாநில அதிமுக துணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதுவை அரசுப் பள்ளியில் நடந்த பெற்றோர், ஆசிரியர் சந்திப்பு கூட்டத்தில், மாணவிகளிடம் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் தவறாக நடக்க முயற்சிப்பதாக புகார் கூறியுள்ளனர். ஆனால், இந்த விஷயத்தை பள்ளி நிர்வாகமும், கல்வித் துறையும் மூடி மறைக்க முயற்சித்துள்ளது.
இதைக் கண்டித்து பெற்றோர்கள், எழுத்துபூர்வமாக கல்வித் துறையிடம் புகார் அளித்தபின் 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை பெற்றோர்கள் முதலில் புகார் கூறியபோதே ஏன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
பெற்றோர்களால் பாலியல் புகார் கூறப்பட்ட மேலும் 2 ஆசிரியர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் நிர்பந்தம் காரணமாக இந்தச் சம்பவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். புதுவை காவல் துறை உடனடியாக ஆசிரியர்கள் மீது தானாக முன்வந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்த கல்வித் துறை உயரதிகாரிகள் அனைவர் மீதும் உடனடியாக போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். மாணவிகளை தனியே அழைத்துப்பேசி அவர்களின் குறைகளை களைய வேண்டும். மாணவிகள், பெற்றோர் புகார் கூறும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் புதுவையில் மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
புதுவையில் நடைபெற்றுள்ள மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து தேசிய குழந்தைகள் நல கமிஷன் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும். அரசியல் பின்புலத்தால் குற்றங்களில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். தவறிழைத்த ஆசிரியர்களுக்கு துணை செல்வது ஆட்சியாளர்களுக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரும் கேடு என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.