Motivation Story: போருக்கெதிராகப் போர் தொடுப்போம் – சீஸ் ஸ்லீஜர்ஸின் வாழ்க்கைப் பாடம்!

`அமைதி நிலவும் காலத்தில், மகன்கள் அப்பாக்களுக்கு இறுதிச்சடங்கு செய்கிறார்கள். போர்க்காலத்தில், அப்பாக்கள் மகன்களுக்கு இறுதிச்சடங்கு செய்கிறார்கள்.’ – கிரேக்க வரலாற்றாசிரியர் ஹீரோடோட்டஸ். 

மாதிரிப் படம்

போரால் நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைவிட, தனிமனிதர்களுக்கு ஏற்படும் தாக்கம் குரூரமானது. அது, மனிதர்களின் கால் கைகளைக் காவு வாங்கி முடமாக்குகிறது; கண்கள் குருடாகக் காரணமாகிறது; மனைவி, பிள்ளைகளை நடுத்தெருவில் நிற்கவைத்துவிடுகிறது; பல பெற்றோர்களை அநாதைகளாக்கி, பரிதவிக்கவிடுகிறது; மகத்தான மனித உயிர்களை இரக்கமே இல்லாமல் அள்ளிக்கொண்டு போகிறது. 

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கிறதா… இருக்கட்டும். இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலா… நமக்கென்ன. வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துகிறதா… நடத்திவிட்டுப் போகட்டும். வெறும் செய்திகளாக இவற்றையெல்லாம் படித்துப் படித்து மரத்துப்போய்விட்ட மனநிலை. நமக்கென்று வரும்போதுதான் அதன் வலி புரியும். 

1965, செப்டெம்பர் 8. டச்சு செய்தித்தாள் ட்ரோவ் (Trouw) முதல் பக்கத்தில் அந்த ஐந்து வரிச் செய்தியை வெளியிட்டிருந்தது… `கார் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் சீஸ் ஸ்லீஜர்ஸ் (Cees Sleegers)  மரணமடைந்தார்.’ படிக்கிறவர்களுக்கு இது ஒரு தகவல். அவரை அறிந்தவர்களுக்கோ மனதை உலுக்கியெடுத்த தகவல். சீஸ் ஸ்லீஜர்ஸ் நெதர்லாந்தில் பல பேருக்கு சாகச வீரன், கதாநாயகன், மக்கள் காவலன், உயிரைப் பணயம்வைத்து போர்முனையில் எதிரிகளைப் பந்தாடிய ராணுவ வீரன். 

போர் | மாதிரிப் படம்

1919, மே 13. நெதர்லாந்திலிருக்கும் வெல்தோவன் (Veldhoven) என்ற சின்ன டவுனில் பிறந்தார் சீஸ் ஸ்லீஜர்ஸ். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் அவர் சேர்ந்த இடம் மடாலயம். அவருக்குச் சிறு வயதிலிருந்தே பல நாடுகளுக்குச் செல்ல வேண்டும்; மதப் பிரசங்கம் செய்ய வேண்டும் என்கிற ஆசை. பல மொழிகளை அநாயாசமாகப் பேசுவார். ஆனால், அதற்கான சூழல் அவ்வளவு சீக்கிரம் வாய்க்கவில்லை. 19 வயதில், விளம்பரங்களுக்குப் படங்கள் வரைந்து கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அழைப்பு வந்தது. ராணுவத்தில் சேர்ந்தார். தென்கிழக்கு நெதர்லாந்திலிருக்கும் வென்லோவுக்கு (Venlo) அவரை ஒரு காலாட்படை வீரராக அனுப்பிவைத்தார்கள். 

இரண்டாம் உலகப் போர் உலகையே புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த காலம் அது. 1940, மே 9. ஜெர்மானியர்கள் நெதர்லாந்துக்குள் ஊடுருவியிருந்தார்கள். டச்சுப் படைகளுக்கும், ஜெர்மானியப் படைகளுக்கும் நடுவில் இருந்தது ஒரு நதி. `மாஸ்’ (Maas) அல்லது `மியூஸ்’ (Meuse) என பிரெஞ்சிலும், டச்சு மொழியிலும் அழைக்கப்படும் நதி. நதிக்கு அந்தப் பக்கம் ஜெர்மானியப் படை. இந்தப் பக்கம் டச்சுப் படை. நதியைக் கடந்து வந்துவிட்டால் நெதர்லாந்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துவிடலாம் என்பது ஜெர்மானியர்களின் எண்ணம். அதிகாலை 3:55 மணிக்கு ஆரம்பித்தது போர். கடும் போர். ராணுவ மொழியில் `ஜி-141 பதுங்கு குழி’ என சொல்லப்படும் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார் சீஸ் ஸ்லீஜர்ஸ். 

மாஸ் நதியைக் கடந்து ஜெர்மன் படை வந்துவிடக் கூடாதே என்று கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தது டச்சுப் படை. சீஸ் இருந்த படைப்பிரிவின் கமாண்டிங் ஆபீஸருக்கு ஒரு கட்டத்தில் கடுமையான காயங்கள். கையைத் தூக்கித் துப்பாக்கியையே பிடிக்க முடியாத நிலை. அந்தப் படைப்பிரிவில் இருப்பதிலேயே மிக இளையவரான, இருபதே வயதான சீஸ் ஸ்லீஜர்ஸ் கமாண்டிங் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்தப் பக்கம் வீரர்கள் செத்து விழுந்துகொண்டேயிருந்தார்கள். ஒன்று பின்வாங்கி ஓட வேண்டும் அல்லது எதிர்த்து, போரிட்டு மடிய வேண்டும். சீஸ், உக்கிரமாகப் போராடினார். ஜெர்மானியர்கள் ரப்பர் படகில் கும்பலாக ஏறி, நதியைக் கடக்க வந்தபோதெல்லாம், தன்னுடைய Carbine Rifle-ஐ கொண்டு சரமாரியாகச் சுட்டார்.  பதுங்கு குழியைவிட்டு வெளியே வந்து அவருடன் இருந்த சொற்ப வீரர்களுடன், ஜெர்மன் படை முன்னேறிவிடாதபடி போராடினார். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் நடந்தது அந்தப் போராட்டம். அந்தப் போரில் அவர் உயிர் பிழைத்தது அதிசயம். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சீஸ். வயிற்றில் குண்டுகள் பாய்ந்து தங்கியிருந்தன. முதுகிலும் சில குண்டுச் சில்லுகள் பதிந்திருந்தன. காயங்கள் ஆறி, கொஞ்சம் தேறி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு ஆறு மாத காலமாகியிருந்தன. 

உக்ரைன் – ரஷ்யா போர்

அதற்குப் பிறகும் மனிதர் சும்மா இருக்கவில்லை. பிரிட்டிஷ் பைலட்டுகள் பதுங்கிக்கொள்ள உதவுவது போன்ற சின்னச் சின்ன ராணுவ வேலைகளில் ஈடுபட்டார். 1944-ல் நெதர்லாந்தின் கிழக்குப் பகுதி விடுதலை பெற்ற பிறகு, அவருக்கு ராணுவத்தில் கௌரவப் பதவி கிடைத்தது. அவருடைய தேசபக்திக்கும் தியாகத்துக்கும் உரிய அங்கீகாரத்தை நெதர்லாந்து அரசு வழங்கியது. 1954-ம் ஆண்டுவரை அவர் நெதர்லாந்து படையில் ராணுவ வீரர். ஆனால், அவருடைய வாழ்க்கை நிலைகுலைந்து போயிருந்தது. ராணுவத்திலிருந்து விலகிய பிறகு வெல்தோவனில் ஒரு சேல்ஸ்மேனாகப் பணியாற்றினார். ஆனால், போரில் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அவரின் உடலையும் மனதையும் வாழ்நாளெல்லாம் பாதித்துக்கொண்டிருந்தன. சதா தலைவலி, உடல் சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை என மிகவும் அவதிப்பட்டார் சீஸ். 

1957 ஜனவரியில் வில்ஹெல்மினா எலிசபெத் (Wilhelmina Elisabeth) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இல்லற வாழ்க்கை இனிக்கவில்லை. திருமணமாகி ஐந்தே மாதங்களில் விவாகரத்து. அதற்குக் காரணமும் போர் அவருக்கு மனதளவில் ஏற்படுத்தியிருந்த தாக்கம்தான் என்கிறார்கள். அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடத்தில் மகள் ஹன்னீ (Hannie) பிறந்தாள். அது தன் குழந்தை என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு புத்தி பேதலித்துக்கிடந்தார் சீஸ். இது சீஸ் ஸ்லீஜர்ஸ் என்கிற தனிமனிதனின் வாழ்க்கை மட்டுமல்ல. உலகில் நடந்த போர்களிலெல்லாம் பங்கேற்று, இழக்கக் கூடாததையெல்லாம் இழந்த வீரர்களின் அடையாளமாக நிற்கும் பதிவு. போர் என்கிற அரக்கன், மனிதர்களை வெறிகொண்டு சூறையாடும் என்பதற்கு உதாரணம். அதனால்தான் சமூகச் செயற்பாட்டாளர்கள், உலகில் எங்கு போர்ச் சூழல் ஏற்பட்டாலும் `சண்டை வேண்டாமே… சமாதானமாகப் போய்விடலாமே’ என்று பதறிப்போய் குரல் கொடுக்கிறார்கள். 

அண்மையில் இணையதளத்தில் வைரலான ஒரு பதிவு, படிப்பவர்களை கதிகலங்கவைத்தது. சிரியாவில் ஏதோ ஓர் இடம். அங்கு நிகழ்ந்த ஓர் உரையாடல்… 

“அம்மா… இன்னிக்கி பூரா நான் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டியாம்மா?’’ 

“ஆமாண்டா செல்லம்.’’ 

“என்னை உனக்குப் பிடிக்குமாம்மா?’’ 

“ரொம்பப் பிடிக்கும் கண்ணு.’’

“எவ்வளவு பிடிக்கும்?’’ 

“இவ்வளவு…’’ 

“அவ்வளவுதானா?’’ 

“இவ்வ்…வ்வளவு.’’ 

சிறுவன் நட்சத்திரங்களைப் பார்க்க ஆரம்பிக்கிறான். 

“தம்பி…’’ 

“என்னக்கா?’’ 

“இன்னிக்கி பூரா நான் அம்மா மாதிரி நடிச்சேன்ல… இப்போ நீ அம்மா மாதிரி நடிப்பியாம். நான் உன் மடியில தலைவெச்சு படுத்துப்பேனாம். சரியா?’’ 

சிறுவன் அமர்ந்துகொள்ள, இப்போது சிறுமி அவன் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொள்கிறாள். அந்தச் சிறுவன், தன் மழலைக் குரலில் தனக்குத் தெரிந்த தாலாட்டைப் பாடுகிறான். அந்தச் சின்னஞ்சிறு சிறார்களின் தாயும் தந்தையும் சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் இறந்துபோயிருந்தார்கள். 

ஆங்கில எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ், `போரை நாம் முடிவுக்குக் கொண்டு வரவில்லையென்றால், போர் நம்மை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்’ என்று சொல்லியிருக்கிறார். அதை மனதில் ஆழமாகப் பதித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது!  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.