உருவ கேலிக்கு எதிரான விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், அது குறித்து பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், ‘அமைச்சரே உங்கள் வயிற்றை குறையுங்கள்’ என கமென்ட் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவன்குட்டி, ’உருவ கேலி என்பது கேவலமான செயல். உருவ கேலி செய்த பின்னர் என்ன விளக்கம் அளித்தாலும், அது ஏற்கமுடியாத ஒன்று. சிலரால் தொரடப்படும் உருவ கேலியால் நம்மில் பலர் பாதிப்படைந்து வருகிறோம்’ என்று குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவன்குட்டி, ‘ஒருவர் மீதான உருவ கேலிகளை நாம் நிறுத்த வேண்டும். நவீன மனிதர்களாக இருக்க நாம் கற்றுக் கொள்வோம். உருவ கேலிக்கு எதிரான விழிப்புணர்வை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்தும், ஆசிரியர் திறன் பயிற்சி வகுப்புகளின் போது, இது போன்ற கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது குறித்து கற்பிக்கவும் ஆலோசிக்கப்படும்’ என்றார்.

மேலும், சக மாணவர்களால் உருவ கேலிக்கு உள்ளான மாணவனிடமும், பெற்றோரிடமும் பேச உள்ளதாகவும், அவர்களை தன்னம்பிக்கையுடன் இருக்கும்படியும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். `ஒருவரின் நிறமோ செல்வமோ முக்கியமல்ல, அவர்களின் கனிவான குணமே அவர்களுக்கான தனித்துவத்தைப் பெற்றுத் தரும்’ எனவும் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது கேரளாவில் பேசப்பட்டு வருகிறது.