ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் உள்ளூர் மாணவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்கி பயன்று வருகின்றனர்.
இந்தச் சூழலில் அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், விடுதியில் தங்கி பயிலும் 213 மாணவர்களுக்கு, கீழக்கரை வடக்கு தெருவில் உள்ள தனியார் ஹோட்டலிலிருந்து தினமும் உணவு தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று இரவு அந்த ஹோட்டலிலிருந்து மாணவர்களுக்கு புரோட்டா தயார் செய்து எடுத்து வரப்பட்டு சாப்பிட வழங்கியிருக்கின்றனர். புரோட்டாவில் பெட்ரோல் வாசனை அடிப்பதாக விடுதி வார்டனிடம் மாணவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்து கல்லூரி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்காமல், வார்டன் மாணவர்களிடம் அலட்சியமாக பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.
வேறு வழியின்றி பசியின் காரணமாக ஒரு சில மாணவர்கள் மட்டுமே புரோட்டா சாப்பிட்டிருக்கின்றனர். இந்த நிலையில், இரவு 10 மணிக்கு மேல் அந்த புரோட்டாவை சாப்பிட்ட எட்டு மாணவர்களுக்கு வாந்தி, தொண்டை எரிச்சல் ஏற்பட்டு, அவர்கள் மயக்கமடைந்திருக்கின்றனர். இதையடுத்து உடன் தங்கியிருக்கும் மற்ற மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் விடுதிக்கு வந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

தகவலறிந்து ஏர்வாடி தர்கா காவல் நிலைய போலீஸார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் புரோட்டா கடை உரிமையாளர் அப்துல் வாகிதிடம் நடத்திய விசாரணையில், “திங்கள்கிழமை மெனுவாக புரோட்டா வழங்கி வருகிறோம். அதன்படி நேற்று மாலை வழக்கம் போல் புரோட்டாவை தயார் செய்து, இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றோம். அப்போது வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது. எனவே பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு, டேங்க் மீது புரோட்டா பார்சலை வைத்து எடுத்து வந்ததால் லேசாக பெட்ரோல் வாசனை அடித்திருக்கக்கூடும், மற்றபடி வேறெதுவுமில்லை” என அலட்சியமாக பதிலளித்திருக்கிறார்.
மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தப் பிறகு, மருத்துவமனையிலிருந்துதான் போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவரை கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் கீழக்கரைக்கு விரைந்தனர். மேலும் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மற்ற மாணவர்களின் பெற்றோரும் பதறியபடி கல்லூரிக்கு வந்த வண்ணமாக இருக்கின்றனர்.
மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்பட்ட கல்லூரி நிர்வாகத்தின்மீதும், ஹோட்டல் உரிமையாளர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை பார்க்க கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள் குவிந்து வருவதால், கீழக்கரை அரசு மருத்துவமனை பரபரப்புடன் காணப்படுகிறது. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க அங்கு போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.