சபரிமலை மண்டல பூஜை: பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டுக்கான மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

மண்டல பூஜைகளுக்காக இன்று மாலை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்த பின்னர், புதிய மேல்சாந்திகளான சபரிமலை ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைப்புறம் ஹரிகரன்நம்பூதிரி ஆகியோருக்கு அபிஷேகம் நடத்தி அவர்களை தந்திரி கண்டரரு ராஜீவரரு கோயிலுக்குள் அழைத்து செல்வார். வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 4:00 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு மண்டலகால நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை தொடங்கி தொடர்ந்து 41 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிற டிசம்பர் மாதம் 27ஆம் தேதி மண்டல அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து, கோயில் நடை மூடப்படும். அதன் பின்னர், மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.

மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள்
sabarimalaonline.org
எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் தாங்கள் தரிசனம் செய்ய விரும்பும் தேதி மற்றும் நேரத்தை ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய கட்டணம் இல்லை. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முன்பதிவு தேவையில்லை. ஒரு கணக்கிலிருந்து 10 யாத்ரீகர்கள் தரிசனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விவரங்களை சரியாக குறிப்பிட வேண்டும்.

ஆன்லைன் முறையில் தரிசன இடங்களை முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்கு நேரடி முன்பதிவு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலை பாதைகளில் 13 இடங்களில் செயல்படும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்து சன்னிதானம் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.