பட்டியலினத்தவரை இழிவாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடிகை மீரா மிதுனை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சிகள் விசாரணை நடந்து வருகின்றன. இந்தநிலையில் ஜாமீனில் வெளியில் வந்த நடிகை மீரா மிதுன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அதனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பிடிவாரண்ட் பிறக்கப்பட்ட நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடிகை மீரா மிதுனைத் தேடி வருகின்னர்.

இந்தநிலையில் தன்னுடைய மகளைக் கண்டுபிடித்து தரும்படி நடிகை மீரா மிதுனின் அம்மா, சில வாரங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார். இந்தப் புகார் மனு, கீழப்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகும் நடிகை மீரா மிதுன் எங்கே தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று முந்தினம் மீண்டும் நடிகை மீரா மிதுனின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்தத் தடவையும் நடிகை மீரா மிதுனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. அவரைத் தேடிக் கொண்டிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளி வைத்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, நடிகை மீரா மிதுன் குறித்து சில தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதில், `நடிகை மீரா மிதுன் பயன்படுத்தி வந்த செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அவர், தன்னுடைய குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ளவில்லை. அதனால் அவர் எங்கு தலைமறைவாக இருக்கிறார் என்று தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், நடிகை மீரா மிதுன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமலிருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸை அனுப்ப முடிவு செய்திருக்கின்றனர். அதுதொடர்பான நடைமுறைகள் முடிந்தபிறகு நடிகை மீரா மிதுனுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம். “நடிகை மீரா மிதுன், மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த இரண்டு வழக்குகளிலும் அவர் தலைமறைவாக உள்ளார். பெங்களூருவில் அவர் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த ஒரு தகவலின்படி அங்கு விசாரித்தபோது நடிகை மீரா மிதுன் அங்கிருந்தும் தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து அவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.