சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை முயற்சியில் ஒரு பகுதியான ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் சோதனை வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது நாசா. கடந்த 1969 வாக்கில் அப்போலோ 11 மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி இருந்தது நாசா. அதன் பிறகு இப்போது இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பை காட்டிலும் துல்லியமான முறையில் நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆர்ட்டெமிஸ் திட்டத்தை நாசா கையில் எடுத்துள்ளது. வணிக ரீதியாகவும் மற்றும் சர்வதேச பார்ட்னர்ஷிப் மூலம் இந்தத் திட்டம் இயங்கி வருகிறது. இதில் அறிந்து கொள்ளும் பாடங்களைக் கொண்டு செவ்வாய் கிரகத்திற்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பும் முயற்சியை மேற்கொள்ள உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
ஆர்ட்டெமிஸ் 1 பயணம் – முக்கிய அம்சங்கள்
- நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் இந்த முயற்சியில் ஆர்ட்டெமிஸ் 1 ராக்கெட் மிகவும் சக்தி வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய நேரப்படி நண்பகல் 12:17 மணி அளவில் இந்த ராக்கெட் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
- புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் இறுதியில் ஆர்ட்டெமிஸ் 1 ராக்கெட்டை ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது.
- இரண்டாவது முயற்சி எரிபொருள் கசிவு காரணமாக கைவிடப்பட்டது.
- செப்டம்பர் இறுதியில் இயான் சூறாவளி காரணமாக மூன்றாவது முயற்சியும் கைவிடப்பட்டது.
- இதன் மூலம் நிலவுக்கு பின்பக்கத்தில் ஓரியான் எனும் கேப்ஸ்யூலை அனுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணி இது.
- ஓரியான் கேப்ஸ்யூல் வரும் 26 நாட்களில் பூமிக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வரும் டிசம்பர் 11 அன்று கலிபோர்னியாவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் இந்த கேப்ஸ்யூல் வந்து விழும் என தெரிகிறது.
- இந்த திட்டத்தின் மூலம் நடப்பு தசாப்தத்தின் இறுதியில் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப உள்ளது நாசா.