ஓபிஎஸ் – இபிஎஸ் இணைப்பு: பாஜக முடிவு இதுதானா? நயினார் நாகேந்திரன் சொன்னது இதுதான்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் உள்ளது. கட்சி தலைமை முடிவு செய்தால் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நின்று தேர்தலை சந்திப்பேன் என நெல்லையில் தமிழக சட்டமன்ற குழு பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் மற்றும் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார்நாகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நயிகேந்திரன், “பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை அமைப்பு ரீதியான பணிகளை நாடாளுமன்ற தேர்தலுக்காக செய்து வருகிறோம். அதிமுக – பாஜக கூட்டணி என்பதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. யார் தலைமையில் கூட்டணி என்பதிலும் எந்தவிதமான பிரச்சனை இல்லை.

பாஜகவினருக்கும், பொதுமக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பாரத பிரதமர் உத்தரவிட்டதன்படி தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் வந்து பார்த்து சென்று கொண்டிருக்கிறார்கள். மத்திய அமைச்சர்களின் வருகை தமிழகத்தில் இனியும் தொடரும்.

பத்து சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பது எதிலும் இல்லை இந்த இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பல தரப்பினரும் உள்ளனர். பத்து சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக எதிராக முடிவு எடுத்துள்ளது. நீதிமன்றத்தையும் அவர்கள் நாடி உள்ளனர். தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 10% இட ஒதுக்கீட்டை தமிழக அரசாங்கம் உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும்.

அதிமுகவில் பிரிந்து உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்தால் பலம். அதிமுகவின் அனைத்து தரப்பும் ஒன்றாக இருந்து தேர்தலை சந்தித்தால் நன்றாக இருக்கும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை நம்பியே உள்ளது. தனியாக தேர்தலை சந்திப்போம் என எந்த கட்சியும் சொல்ல முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு கட்சி ஆரம்பித்தால் கூட்டணியே வைக்க கூடாது என சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே. கொள்கை அளவில் யாரும் யாருடனும் கூட்டணி கிடையாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளது. நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன். நெல்லை சட்டமன்ற தொகுதியில் செய்த பணிகளை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து செய்வேன்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.