டோக்கியோ: தங்களது கடல் பரப்புக்கு அருகில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியுள்ளதாக ஜப்பான் குற்றம் சுமத்தியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் கடற்படை தரப்பில், “ வட கொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தியது. வட கொரியாவின் ஏவுகணை ஜப்பானின் கடல் பகுதிக்கு அருகில் விழுந்தது. அமெரிக்காவின் நில பகுதிகளை தாக்கும் எண்ணத்தில்தான் இந்த சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது. வட கொரியாவால் இம்மாதத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது பெரிய ஏவுகணை சோதனை இதுவாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவின் கண்டம்விட்டு கண்டம் பாயும் சோதனையை தென் கொரிய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. வட கொரியாவின் ஏவுகணை சோதனை சட்டவிரோதமானது மற்றும் பொறுப்பற்ற தன்மை கொண்டது. இதற்கான விலையை வட கொரியா பெறும் என்று என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கடுமையாக விமர்சித்தன
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் வட கொரியா ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் நிலவியது. வடகொரியாவின் செயலுக்கு பல்வேறு எதிர்வினைகள் எழுந்தும் வட கொரியா தனது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வதிலேயே கவனம் செலுத்தி ஐக்கிய நாடுகள் சபையும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.