தன்பாத்: ஜார்கண்டில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சுரங்கத்தில் சிக்கி 30 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் அடுத்த கபசரா அவுட்சோர்சிங் காலியரியில் சிலர் சட்டவிரோதமாக மண் அள்ளி வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 25 முதல் 30 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஜம்தாரா மற்றும் புருலியா போன்ற இடங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் மேற்கண்ட சட்டவிரோதமாக மண் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தனர். ஏற்கனவே இதே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சிலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்து இரண்டரை மணி நேரம் ஆகியும் நிர்சா போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. அதன்பின் அங்கு வந்த மீட்புக் குழுவினர், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 100 மீட்டர் சுற்றளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.